பக்கம்:பாலைப்புறா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 பாலைப்புறா

கணவனாய் இருக்க மாட்டேன், என்பதால், இந்த சந்திராவோடு சேர்ந்து வலை பின்னிவிட்டாள். பெற்றவர்களிடம் அழுகை பலிக்காமல் போனதால், இப்படி ஒரு சூழ்ச்சி; இப்போதுதான் புரிகிறது. நல்லாவே புரிகிறது. இவளும் அவளும், சுப்பையா மாமா வீட்டில் இருந்து வெளியேறும் போது, என்னைப் பார்த்தே ரகசியம் பேசினார்கள். ஜீப்புக்குள் ஏறிய இவள், மீண்டும் என்னை நோட்டம் போட்டுவிட்டு, கலைவாணியிடம், 'நின்னுடும் நின்னுடும்’ என்றாள். 'எது நின்னுடும்?’ என்றாள்.

டாக்டர் சந்திரா, அவன் பித்துப்பிடித்து நிற்பதாக அனுமானித்து, 'ஐ அம் ஸாரி வேற எந்த வழியும் தெரியல... அதனாலதான் கல்யாணக் கட்டாயத்தால்தான் சொல்லிட்டேன். ஒங்க மனதை சிதைத்துட்டேன்’ என்றாள். அவனைப் பார்த்தால் அழுகை வரும் போல இருந்தது. அவனைப் போலவே, அவளும் வியர்வையில் வெம்பினாள்.

மனோகர், டாக்டர் சந்திராவை, மூர்க்கமாய்ப் பார்த்தான். அடிக்கப் போவது போலப் பார்த்தான். பிறகு, தனது உடல் முழுவதையும், பெருமிதமாய் 'பாதாதி கேசமாய்ப்' பார்த்துக் கொண்டான். தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். ‘எனக்கு எய்ட்ஸ் எப்படி வரும்? இதுவரை மனதால் கூட எவருக்கும் கெடுதல் நினைக்காதவன்... கம்பெனியில் எனக்குப் பெயரே ஜென்டில்மேன் எஞ்சினியர்... அதே கம்பெனியில், என் பேச்சுக்கு மதிப்பளித்து, ஊர்க்காரன் இரண்டு பேருக்கு நிர்வாகம் வேலை கொடுத்திருக்கிறது. இவர்களிடம் ஒரு பைசா எதிர் பாராதவன், கம்பெனி டிரைவர், பியூன் எல்லோருமே என்னிடம்தான் கடன் கேட்பார்கள். அவர்கள் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன். வாயால் திருப்பிக்கேட்டதில்லை. ஊரில் கூட வயதான அநாதைக்கிழவர் பாண்டித்துரை தாத்தாவுக்கு நூறு ரூபாய் கொடுத்தேன்... மனிதர் அழுதழுது கும்பிட்டுக் கும்பிட்டு என்னை ஆசிர்வதித்தார். தொழுநோயில் அவதிப்படும் ராமக்கா பாட்டியை, மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தவனே நான்தான், எந்த தாசியையும் ஏறெடுத்துப் பார்க்காதவன் நான்... அப்படிப்பட்ட எல்லோருக்கும் நல்லவனான எனக்கா வரும்? வரவே வராது. இது சூழ்ச்சி, ஆழமான சூழ்ச்சி. இந்த சூழ்ச்சிக்காரிகளான மேனாமினுக்கி கலைவாணிக்கும், சேடிஸ்டான இந்த சந்திராவுக்கும் எய்ட்ஸ் வரும். இவர்களை விட்டுவிட்டு எப்படி எனக்கு வரும். ஐயாம் ஆல் ரைட் ஆரோக்கியமானவன் நான்...'

மனோகர், சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வந்தான். வந்ததும் வராததுமாய், மோட்டார் பைக்கில் ஏறினான். ஆச்சரியப்பட்டுப் போன சந்திரா, பின்னால் ஓடினாள். நம்பிக்கையோடு விடை கொடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/58&oldid=1405019" இலிருந்து மீள்விக்கப்பட்டது