பக்கம்:பாலைப்புறா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அந்த மாதிரி வேகத்தில், அவனும் போனதில்லை. அந்த மோட்டார் பைக்கும் கண்டதில்லை. இந்த வேகத்தைவிட, பாதி வேகத்தில் போகும் பேருந்துகளில், சிலவற்றிற்கு குழி பறித்த, அந்த கோணச்சத்திர-வெள்ளையன்பட்டி வழியான அம்பாசமுத்திர குறுஞ்சாலைக்கும், இது புது அனுபவம். நீண்டு படுத்து முதுகில் சுமக்கும் அந்த வாகனத்தை, அப்பப்போ மல்லாந்து பார்த்து, அவனையும், அந்த வாகனத்தையும் விழுங்கப் பார்த்தாலும், அந்தச் சாலையால் முடியவில்லை. பனை மரங்களும், இடையிடையே எட்டிப் பார்க்கும் ஈச்சம் பனைகளும், சுமைதாங்கிக் கற்களும், வேறு திசையில் நகர்வது போன்ற மாயை...

அந்த வேகத்திலும், மனோகர், அந்தப் பெண் கும்பலை தொலைவிலேயே பார்த்து விட்டான். அதே அந்த அடிக்கல் இடத்திற்கு அருகே, ஒரு சின்னக் கொட்டகையாய் மாறிய முன்னாள் பந்தலில், குத்து மதிப்பாக முப்பது பெண்கள், ஒலைப் பாய்களிலோ அல்லது பனைத் தட்டிகளிலோ உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள் முன்னால், நாற்காலிகளில் மூன்று ஆண்கள்; கலைவாணி, நின்றபடியே கைகளை ஆட்டி, ஆட்டிப் பேசிக் கொண்டிருப்பதையே பார்க்கிறார்கள். அந்த இடத்தை வேலியாக்கும் சாலைப் பக்கம் பாய்ந்த போது 'எத்தான்... ஏய் அத்தான்!' என்ற கலைவாணியின் குரல்... கூட்டத்துக்கு முதுகு காட்டி, இவனுக்கு முகம் காட்டி, கையாட்டுவதையும் பார்த்துவிட்டான்... ஆனாலும் அவளைப் பாராததுபோல் ஒரு பாசாங்கு காட்டி, வெள்ளையன்பட்டியை நடமாட வைக்கும் ஒரே ஒரு வசதியான இந்தச்சாலை, மண்சாலையாய் மாறும் இடது பக்கம் திரும்பி, பின்னர், கல்முள், அதிகமாய் உள்ளவண்டித்தடத்தில், ஒடி, ‘பரும்புக் காட்டிற்கு' வந்த பிறகே, வண்டியை நிறுத்தினான். வந்த வேகமோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/60&oldid=1405021" இலிருந்து மீள்விக்கப்பட்டது