பக்கம்:பாலைப்புறா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

சு. சமுத்திரம்

நொந்த வேகமோ, உடலெல்லாம் ஒரே வலி... தலைக்கு வெளியே மட்டும் அல்லாது உள்ளுக்குள்ளும் ஒரே சுற்றல்,

அந்த மோட்டார் பைக் இருக்கையில், முகம் போட்டபடி மனோகர் குப்புறக் கிடந்தான். அவன் முகத்தில் வியர்வைப் பெருக்கத்தை, அந்த இருக்கை உறிஞ்சியது. அப்படியே சாய்ந்து கிடந்தவன், கற்குவியல்களுக்குள் நடந்து ஒரு பாறையில் மல்லாக்க சாய்ந்தான். உச்சி சூரியன் அவனைச் சுடவில்லை. பாறை வெப்பம், அவனைப் பாதிக்கவில்லை. அங்குமிங்குமாய் அலைக்கழிந்து பார்த்தான். மொட்டைத் தலையான பாறைகள். கற்கள் கூட கருகிப் போய் கிடந்தன. உருளைக் கிழங்கு போன்ற சரளைக் கற்கள். செடிகளாக மட்டுமே வளரும் கற்றாழை, அங்கே மரமாக நின்றன. அதன் கிளைகள் எங்கும் முட்செருப்புகள் போன்ற காய்கள். அவற்றின் பார்வை பயங்கரமாய் பயமுறுத்துவது போல் இருந்தது. தரை, அவன் காலின் ஈரத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது.

சிந்தித்து, சிந்தித்து மனம், மரத்தது. கண்கள் எரிந்தன. தொண்டைக்குள் அடைப்பு. நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று தன்னந்தனியாய் தானாய்ப் புலம்புகிறது. நெஞ்செலும்பை, அடித்துக் கொள்கிறது. இதயத்தில் முட்டி மோதுகிறது.

‘இனிமேல் கலைவாணியோடு வாழ்வது என்பது முடிந்து போன சமாச்சாரம்... ஆனாலும், இந்த திருமணத்தை அவளே நிறுத்திக் காட்டட்டும். இரண்டு முயற்சிகளில் தோல்வி அடைந்தவள், கடைசி முயற்சியாய் என்ன செய்கிறாள் என்பதைப் பார்த்துவிடலாம். அவனைப் பொறுத்த அளவில் கல்யாணத்தை நிறுத்துவதற்கு, எந்த முயற்சியும் செய்யப் போவது இல்லை. மூன்றாவது முயற்சியிலும் அவள் குப்புற விழுந்து, கல்யாண மேடை வழியாய் படுக்கை அறையில் மல்லாந்து விழுந்தாலும், ஒரு வகையில் நன்மைக்கே... பிடிக்காத ஒன்றை முறைப்படி தடுப்பதற்குப் பதிலாக, ஒரு இளைஞனை, எதிர்கால எய்ட்ஸ் நோயாளியாய் சித்தரித்து, அவன் மனோபாவத்தையே மாற்றிவிட்டவள், கொலையை விட கொடுரமான காரியத்தைச் செய்தவள்; மனைவியாய் வந்தாலும் தொடுவதாக இல்லை... வேறு வழி இல்லாமல் தொடுவதாக இருந்தாலும், அது தாக்குவதாகவே இருக்கும்... சண்டாளி. ராட்சசி. ஊர்சுற்றி... என்னைசாக வைக்கவே வாழ்கிறவள்’.

“எத்தான். ஒங்களுக்கு காது செவிடா?”

மனோகர், தலையைத் தூக்காமலேயே பார்த்தபோது, கலைவாணி சைக்கிளை அவன் மோட்டார் பைக் மேல், சாய்த்துப் போட்டுவிட்டு, அவனைப் பார்த்து ஓடிவந்தாள். அவன் கைகளை எடுத்து தன் தோள்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/61&oldid=1405022" இலிருந்து மீள்விக்கப்பட்டது