பக்கம்:பாலைப்புறா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 பாலைப்புறா

போட்டுக் கொண்டாள். பிறகு அவனை லேசாய் உருட்டிவிட்டு, கிடைத்த இடத்தில், அவனைப் பார்த்து ஒருக்களித்து சாய்ந்தபடியே ஒப்புவித்தாள்.

"நம்ம ஊர்ல... பெண்கள் சுயவேலைக்குழு இருக்குதா... ஆரம்பத்தில் பாங்கில் பணம் சேமித்து, ஒவ்வொருத்திக்கும் 500 ரூபாய் சேமிப்பும் இருக்குதா..., இப்போ பேங்க் காரங்களும், பிளாக் அதிகாரி ஒருவரும் வந்திருக்காங்க. ‘என்ன தொழில் செய்யப் போறீங்க...? எவ்வளவு கடன் வேணுமுன்னு' கேட்க வந்திருக்காங்க. இந்த பாய் பின்னுதல், கூடை முடைதல், சூளை போடுதல் இது மாதிரி இல்லாமல், எல்லோரும் செய்றது மாதிரி ஒரு நவீன தொழிலை செய்யணுமுன்னு நினைக்கேன். எனக்கென்னமோ செயற்கை வைரம் செய்யுறது சரியாப்பட்டது. எதுக்கும் ஒங்க கிட்டே யோசனை கேட்கலாமுன்னு கூப்பிட்டேன். நீங்க எஞ்சினியராச்சே... வந்தவங்க, ஒரு ‘இண்டரஸ்டிங்' செய்தியை சொன்னாங்க. தர்மபுரி மாவட்டத்தில் டெங்கனிக் கோட்டை என்கிற இடத்துல வண்ணாரப் பெண்களை ஒன்று திரட்டி, டோக்ரா குரூப்பாக்கி, அதுதான். டி.டபிள்யூ.சி.ஆர்.ஏ. கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகள்நல வளர்ச்சித் திட்டம்... இதன்படி அறுபது பெண்களை, நான்கு குழுவாக்கி ஒவ்வொரு குழுவிற்கும் தொழிற் பயிற்சி கொடுத்து, அவங்க கூட்டாய் தொழில் துவங்க - சுழல் நிதியாய் பதினையாயிரம் ரூபாய் வழங்குற திட்டம்... இதன்படி கழுதைகளில் அழுக்கு துணி எடுத்த பெண்களுக்கு வங்கிக் கடனுல ஒரு வேன் வாங்கி கொடுத்திருக்காங்களாம். இந்தப் பெண்கள், இப்போ பக்கத்து பேக்டரிக்கு போய், அங்கே யூனிபாரங்களையும் எடுத்துட்டு வந்து, துவைத்து, தேய்த்து திருப்பி வேனுலயே கொண்டு போய் கொடுக்காங்களாம். கழுதைகள், வேனாய் மாறிட்டு; இந்த மாதிரி திட்டங்கள், சில இடங்கள்லதான்... உருப்படியாய் நடக்குதாம்... ஆனாலும், இந்த கூட்டம்தான் என் கடைசி கூட்டம். அப்புறம் உங்க கூடத்தான். கூடத்தான் என்கிறதில ரெண்டு அர்த்தம் இருக்கிறது என் ஹீரோவுக்கு தெரியுமா?”

கலைவாணி, தனது உணர்வுகளை, அனுபவங்களோடு கலந்து, அவன் காதுகளில் கொட்டிக் கொண்டிருந்தாள். அவனை, அவள் முழுமையாய் பார்க்கவில்லை. ஆனால், அவன் பார்த்தான். பார்த்தபடியே நோட்டமிட்டான். தனக்குள் சொன்னான். ‘என்னுடைய ரியாக்ஷனை பார்க்க வந் திருக்கே... நல்லா பாரு... இனிமேல் நீ என்ன செய்யப்போறே என்கிறது கூட எனக்கு அநாவசியம்... இதுக்கு மேலே நீ என்னதான் செய்துடுவே... நானும் இன்டலிஜெட்தான்.'

கலைவாணி, அவனைச் சேர்த்துப்பிடித்து, தன்னைப் போல், தன் பக்கமாக ஒருக்களித்து சாய்த்தாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பிறகு தன் கண்களை ஒரு கையால் மூடிக் கொண்டே பேசினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/62&oldid=1405023" இலிருந்து மீள்விக்கப்பட்டது