பக்கம்:பாலைப்புறா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 63

"போனவாரம், அந்த டாக்டரம்மாவும், நானும் உங்களை கண்ணால சீண்டிக்கிட்டே ரகசியமாய் பேசுனோம், பாருங்க... நீங்க கூட கண்ணடித்து கேட்டீங்களே. அது என்னன்னு தெரியுமா?”

மனோகர், பாறையிலிருந்து எழுந்து நின்ற, அவளைப் பார்த்தான். அவளும் இப்போது, கை கால்களை பாறையில் பரப்பியபடியே அவனை ஆசையோடு பார்த்தாள். பிறகு கண்களை மூடிக்கொண்டே விளக்கினாள்.

"நம் கல்யாணச்சமயத்திலே பார்த்து எனக்கு ‘பீரியடு’... அதுதான் அந்த மூணு நாள்... நினைக்கவே சங்கடமா இருந்தது. டாக்டர் சந்திரா கிட்டே சொன்னேன். ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கறதுக்கு மாத்திரை எழுதி கொடுத்தாங்க, வேற மாத்திரையாய் இருந்தால், அப்பா கிட்டயோ... அண்ணன் கிட்டயோ கொடுத்திடலாம். கோணச் சத்திரத்தில வாங்கிட்டு வருவாங்க. ஆனால் இதைக் கொடுக்க முடியுமா? நீங்கதான் வாங்கிட்டு வரணும்... மருந்து கடையிலே ஆள் இல்லாத சமயமாபார்த்து பக்குவமாய்... வாங்குங்க... இந்தாங்க!” -

கலைவாணி, ஜாக்கெட்டுக்குள் கையிட்டு, இரண்டாய் மடிக்கப்பட்ட ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டாள். மூடிய கண்களைத் திறக்காமலே, முகம், முக்கோணமாய் நாணிக்கோண, காகிதம் பிடித்த கையை, இந்த இடத்தில்தான் அவன் நிற்பான் என அனுமானத்தோடு, பார்வை இழந்த பெண்போல், ஆடி ஆடி ஆகாயத்தில் துழாவினாள்.

இன்னும் கண்விழித்துப்பார்க்காத கலைவாணியை, மனோகர் கையைப் பிடித்துத் தூக்கினான். அப்படியே அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு ஆரத்தழுவினான். அவளை ‘சிக்கென' பிடித்தபடி, அவள் தோள்வழியாய், தலையைத் தொங்கப்போட்டான். ஆறாய்ப் பெருகிய கண்ணிர், அவள் முதுகை, அவளுக்கு தெரியாமலே நனைத்தது. 'அய்யோ... என்ன இப்படி’ என்று அவள் சிணுங்கி, தோளில் கிடந்த அவன் தலையைத் தூக்கி நிமிர்த்தினாள். தெப்பமாக நனைந்த அவன் முகத்தை, வேர்வை துளிகளாய் அனுமானித்து, முந்தானையால் துடைத்து விட்டாள். கையில் உள்ள காகிதத்தை, அவன் பைக்குள் திணித்தபடியே, அவன் மார்பில் சாய்ந்தாள். பிறகு அவனை நிமிர்ந்து பார்த்து, அவன் உதட்டில் முத்தமிட்டாள். முதல் தடவையான வாய் முத்தம்.

மனோகருக்கு அழுகை வந்தது. அந்தக் கிருமிகள் தன்னைப் பிடித்திருக்கலாம் என்ற பயமும் வந்தது. இந்தக் கள்ளம் கபடம் இல்லாத இவளை, ஒரு சூழ்ச்சிக்காரியாய் நினைத்தோமே என்ற சுய வெறுப்பு; இவளைவிட ஒரு நட்பு எதுவும் இல்லை... இவளிடமே அதை சொல்லிவிடலாமா... நான், நானாய் இல்லை என்று சொல்லிவிடலாமா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/63&oldid=1405024" இலிருந்து மீள்விக்கப்பட்டது