பக்கம்:பாலைப்புறா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 பாலைப்புறா

விலகிக் கொள் என்று விலகலாமா... வேண்டாம்.... இது ஒருவேளை விஷப்பரீட்சை. அப்படியா என்று அவள், வெறுப்பாய்க் கேட்டிடக் கூடாது. இதுவும் ஒருதப்புக்கணக்காய் ஆகலாம். கணக்கு போட்டால்தானே, அந்தத் தப்பு வரும்? இவள் இப்படி மெய் சிலிர்த்து இருக்கட்டும். இந்தக் காட்சியே கடைசி காட்சியாக இருக்கட்டும். ..

மனோகர், ஒரு முடிவுக்கு வந்தான். கல்யாணத்தை நிறுத்தியாக வேண்டும்... கெளரவமாக நிறுத்தியாக வேண்டும்... அப்பாவிடம் சொன்னால், வைத்திய செலவுக்கு நிறைய பணம் ஆகுமோ என்று கேட்கக் கூடியவர்.... அம்மாவிடம் சொன்னால் ஊருக்கே சொன்னது மாதிரி... இந்தக் கல்யாணத்தை ‘பாம்பும் சாகாமல் பாம்படித்த கம்பும் நோகாமல்' நிறுத்தக் கூடியவர், தாய் மாமா மகனும், அக்காவின் கணவருமான மோகன் ராம்தான்... அக்காள் ஒரு மாதிரி... ‘வாங்குவதில்' மட்டுமே குறியானவள்... ஆனால் இந்த அத்தான், இவனுக்கு தந்தை மாதிரி... ‘பிளஸ்டூ' முடித்ததும், திருட்டு அரிசி ஓசியில் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக, அப்பா தவசிமுத்து, இவனை ஒரு நியாயவிலைக் கடையில் சேரச் சொன்னபோது, இந்த அத்தான்தான், மாமனாரை ஒரு அதட்டு போட்டு, இவன் பொறியியல் கல்லூரியில் சேரக் காரணமானவர். சேர்த்தது மட்டுமல்லாமல், அவ்வப்போது வந்து கைநிறைய பணம் தந்தார். சொந்த அப்பன் பணத்தில், கொத்தனாராய்க்கூட ஆக முடியாது. அப்படிப்பட்ட அத்தான். ஆசாமி அடாவடிதான்.... சாமி பலமும், அரசியல் பலமும், சுயபலமும் உள்ளவர். ‘வெட்டிட்டேன்னுவா: வெட்டிட்டான்னு வராதே' என்று வேண்டப்பட்டவர்கள் கிட்டே சொல்வார். தப்புத்தான்,... ஆனால் அதுவும் இந்தக் காலத்தில் தேவைப்படுதே...

மனோகர், கலைவாணியை அணைத்தபடியே, மோட்டார் பைக்கிற்கு முத்தமிட்ட சைக்கிள் பக்கமாய்க் கொண்டு போனான். ‘கூட்டத்திற்கு வாங்கத்தான்' என்று கெஞ்சுனது போல் கொஞ்சியவளிடம், தலைக்கு மேல் இருக்கிற கல்யாண வேலைகளை எடுத்துரைத்தான். அதே சமயம் செயற்கை வைரம் செய்வது சிறப்பானது என்று சொன்னான். வைரப்பட்டதாய் நினைத்த தன் உடலும், ஒரு செயற்கை வைரம் தானே என்றும் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

நீண்ட நேர இடைவெளிக்குப்பிறகு, கலைவாணி சைக்கிளிலும், இவன் மோட்டார் சைக்கிளிலும், எதிரெதிர் திசைகளில் புறப்பட்டார்கள். இந்த சைக்கிளில் முன்னால் உட்காருறேன். ஒரு ரவுண்ட் அடிங்களே என்று வெட்கத்தோடும், வெட்கத்தை விட்டும் கேட்டவளின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டே பிரிந்தான். இவளைப் பிரிந்து விட்டு இருக்க முடியுமா என்ற கேள்வி; பிரிவே அவளுக்குத் துணை என்ற பதில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/64&oldid=1405026" இலிருந்து மீள்விக்கப்பட்டது