பக்கம்:பாலைப்புறா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

வெட்டாம்பட்டி முனையிலேயே, அத்தான் வயலுக்குப் போயிருப்பதை தெரிந்து கொண்டு, மனோகர், குளத்துக்கரை மேல் வண்டியை விட்டான். லாரி, டிராக்டர் போகிற கம்மாக்கரை... ஆனால் குளத்தின் கிழக்குப் பக்கத்து அடிவாரத்தை, அண்டை வயல் பேர்வழிகள் ‘மண்கொன்று நிலமாக்கி' வருகிறார்கள். இதனால் குளமே ஒருநாள், குடை சாயப் போகிற நிலைமை. மனோகர் நினைத்துக் கொண்டான். ‘என்னைப் போல் என்னைப் போல்’..

மனோகர், பைக்கை, ஒரு களத்து மேட்டுக்குக் குடை பிடித்த ஆலமரத்தடிப் பக்கம் நிறுத்திவிட்டு, புல் மெத்தை சரிவு வழியாய் கீழே இறங்கினான். ஈரக்கசிவான வரப்புகளில் தாவினான். அந்த வயக்காடு முழுவதும், பச்சைத் தளிர்களாகவும், மஞ்சள் பயிர்களாகவும், வியாபித்து இருந்தது. வயல் மடந்தை, பச்சைப் படவை கட்டி, மஞ்சள் மேலாடையுடன் மல்லாந்து கிடப்பது போன்ற தோற்றம். தென்னை மரக்கரங்களை, கோணல்மாணலாய் ஆக்கி, பனைமரக் கால்களை தூக்கி வைத்து, பிரசவத்திற்கு, தன்னை தயார்படுத்திக் கொள்வது போன்ற தோரணை.

மோகன்ராம், வேட்டியை மடித்துக்கட்டி, டவுசர் பட்டை தெரியும்படி நின்றார். ஒரு கையில் குடையைத் தூக்கிப்பிடித்த வண்ணம், கீழே கதிர் அரிவாள்களோடு இயங்கிக் கொண்டிருந்த வேலையாட்கள் நிமிரும்போதெல்லாம் அதட்டினார். மேகம் கருக்கிறது. அந்தக் கருப்பு முகம் வெள்ளைப்பல் காட்டி, எச்சில்துப்பினால் விதை நெல்கூட தேறாது. நிலத்தில் முகம் போட்ட நெல்மணிகள், அங்கேயே முளைத்து, குறைப்பிரசவமாகி விடும். எல்லோரும் புதிதாய் விதைக்கும் போது, இவர் அறுக்கிறார். ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/65&oldid=1405027" இலிருந்து மீள்விக்கப்பட்டது