பக்கம்:பாலைப்புறா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 பாலைப்புறா

ஊராய், கட்டைப் பஞ்சாயத்துக்களுக்குப் போனதால், காலுக்கும் வலி, நிலத்துக்கும் சுகப்பிரசவம் இல்லாத வலி.

கம்மாக்கரையில், கட்டை வண்டி வருகிறதா என்று எட்டிப் பார்த்த மோகன்ராம், மனோகர், கிணற்றடி பக்கம் வருவதைப் பார்த்துவிட்டு குரலிட்டார். அவனை அங்கேயே நிற்கும்படி சைகை செய்து விட்டு, இவர் நடந்தார். படித்த மைத்துனன் மேல், நெல்மணிகள்பட்டு, அவனை அரிக்கக் கூடாதே என்ற முன் யோசனை. சேறும் சகதியும் அவன் பேண்டை அப்பிவிடக் கூடாதே என்கிற அக்கறை. அதோடு அறுவடைபூமிக்குள் அவன் செருப்புக் காலோடு வரக்கூடாது என்கிற வயல் பக்தி.

மச்சானும், மாப்பிள்ளையும், கிணற்று சரல்மேட்டில் சந்தித்துக் கொண்டனர்.

‘என்ன மாப்பிள்ளை... அப்புறமாய் ஆளைக்காணோம்? கல்யாண நோட்டீஸ் இன்னும் ரெடியாகல்லியா? இதுக்குத்தான் தென்காசியிலே கொடுக்கச் சொன்னேன். கோணச்சத்திரம் பயல், நீத்தார் நினைவுக்குத்தான் லாயக்கு...’

மோகன்ராம், அப்படி அபசகுனமாய் சொல்லிட்டோமே என்று வாயைக் கடித்தபோது, மனோகர் அவர் மார்பில் சாய்ந்தான். அவர் தோளில் ஒரு பக்கமாய் தலை போட்டு விம்மினான். வார்த்தைகள் வர்மமாய் தொண்டைக்குள் விக்கிக் கொள்ள, கண்ணிர், மேட்டுக்கு வந்ததுபோல் அவன் மூக்குக்குள் ஊடுருவ, அவன் மாங்கு மாங்கென்று அழுதான். அர்த்தப்படுத்த முடியாத ஒலிகள். அப்போதுதான் ஒடியது போன்ற, மேல் மூச்சு... கீழ் மூச்சு...

அத்தான், ஆடிப் போனார். அவருக்கும் கண் கலங்கியது. ஆனாலும் சுதாரித்தார். மைத்துனனை நேராய் நிமிர்த்தினார். அவன்முகத்தை துண்டால் துடைத்து விட்டார். பிறகு, தனது தோளை தட்டிக் கொண்டே ஆறுதல் சொன்னார்.

"நாம அழ வைக்கணுமே தவிர... அழப்படாது... உயிருக்கு மேல என்னடா வந்துடும்? ஒன் உயிரைச் சொல்லலே. ஒன்னை பெருமை பிடிபடாமல் பார்க்கிற என் உயிர சொன்னேன். என்ன நடந்தது?”

மனோகர், அத்தானையே பார்த்தான். நீள, அகல, உயரம் என்ற முப்பரிமாணமும் உருண்டு திரண்ட உருவம்... உடம்பின் அழுத்தத்தில், ஒரு காண்டாமிருகத்தின் அலட்சியம். எல்லாருடைய தலைகளுக்கும் மேலே போன கழுத்து. நாற்பது வயதிலும், வாலிபம் போகாத முறுக்கு... பாளை அரிவாள் மீசை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/66&oldid=1405028" இலிருந்து மீள்விக்கப்பட்டது