பக்கம்:பாலைப்புறா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 67

மனோகர், டாக்டர் சந்திரா தெரிவித்த நோயைச் சொன்னான்... அவர் புரியாமல் விழித்த போது, டாக்டர், அசோகன் எய்ட்ஸ் கிருமிகள் ஒருத்தரை என்ன பாடுபடுத்தும் என்பதை, அப்படி எதிர்காலத்தில் படப் போகிறவன் போலச் சொன்னான். தொடர்பற்ற வார்த்தைகள்,... முன்னாலும், பின்னாலும், தாவும் சம்பவக் கோர்வையற்ற சித்திரிப்புக்கள். இடையிடையே விம்மல்கள். அப்போதே உயிர்வாதை... அத்தான் மடியில் உயிர்விட வந்திருப்பது போன்ற தொய்வு... எப்படியோ சொல்லி முடித்தான். பேசிவிட்டு, அத்தானையே பார்த்தான். அத்தான்... தொங்கப் போன அவன் முகத்தை நிமிர்த்தினார். அவன் எதிர் பார்த்ததுபோல் கண் கலங்கி, வாயடைத்துப் போகாமல் பூ இவ்வளவுதானா? என்று சொல்லிச் சிரித்தார். அது, அவருக்கே மிகை என்று தெரியும். ஆனாலும் அது இருக்காது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை... மைத்துனனை, கமலைக் கல்லில் உட்கார வைத்து, இவரும் உட்கார்ந்து கொண்டு, டாக்டர்களைப் பற்றிய தனது பட்டறிவை எடுத்துரைத்தார்.

"எமன் கிட்டே போனாலும்... இந்த டாக்டர் கிட்ட மட்டும் போகப்படாது... மாப்பிள்ளை. இப்படித்தான்... ஒக்கா தலைப் பிரசவத்துக்கு, ஒங்க வீட்டுக்கு வந்திருந்த சமயத்தில், எனக்கு ஒரே இருமல்,... துப்பினால் கட்டி கட்டியாய் ரத்தம். பயந்து போய் டவுன்லே டாக்டர் கிட்டே காட்டினேன்... எக்ஸ்ரே எடுத்தான், சளியை பார்த்தான், அப்புறம் சயரோகமுன்னான். முப்பது ஊசி போட்டான். ஆனாலும் துளித் துளியாய் விழுந்த ரத்தம் கட்டி கட்டியாய் விழுந்துது. உடனே ‘கடவுள நெனைச்சிக்கிட்டே' டி.பி. ஆஸ்பத்திரிக்கு போனான்; அங்கேயும் சயரோகம் முற்றிட்டுன்னான்... ஆனால் உடம்புல எந்த சேதாரமும் இல்ல... கடைசி முயற்சியாய், எங்க நாட்டு வைத்தியர் பேச்சிமுத்து மாமாக்கிட்டே கையக் காட்டினேன்... ‘ஒனக்கு நிச்சயமாய் சயரோகம் கிடையாது. சத்தியமாய் கிடையாது. ஆனால் சூடு ஜாஸ்தி... சூட்டுலயும் ரத்தம் வரும்... என்ன சாப்பிடறேன்னு' கேட்டார். தினமும் பப்பாளிப் பழத்தை கிலோ கிலோவாய் சாப்பிட்டதைச் சொன்னேன். சமைச்சு சாப்பிட சோம்பல் பட்டு, தோட்டத்து பப்பாளியை இரண்டு வேளை சாப்பிடுறதை சொன்னேன்...அவர், என்கைய ஒரு உதறு உதறிட்டு ‘கள்ள பிள்ள கழிக்கிறதுக்கு கொடுக்கிற... பப்பாளியையா சாப்பிட்டே... பயங்கரமான சூடுடா'ன்னார். பப்பாளியை நிறுத்தச் சொன்னார். ரத்தமும் நின்னுட்டு... மெத்தப் படிச்சவன் சுத்தப் பைத்தியம். அதுலயும் பொம்புள படிச்சு பூலோகமே கெட்டு வருது. இப்படியா சொல்லிட்டாள்னு சிரிக்கணும்... அழப்படாது.... இப்ப கூட எவனும் கத்தியோட குத்த வந்தாலும், என்னால வெறுங்கையோட எதிர்க்க முடியும். ஆனால் பப்பாளி பழத்தோட வந்தால் பயந்திடுவேன்".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/67&oldid=1405030" இலிருந்து மீள்விக்கப்பட்டது