பக்கம்:பாலைப்புறா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 பாலைப்புறா

மனோகர், அத்தானை வியந்து பார்த்தான், அவனிடம், எப்போதும் உண்மை பேசும் அத்தான், இப்போதும் உண்மை பேசுகிறார் என்பதில் ஆனந்தம்... அப்படிப்பட்ட நோய் தனக்கு இல்லை என்பதை அத்தான் சொல்லிக் கேட்டதில் ஒரு தெம்பு. கலைவாணியோடு கல்யாணம் நடக்கும் என்பதை நினைப்பதிலேயே ஒரு இனிமை. ஆனாலும் மனதை கல்லாக்கிக் கொண்டே கேட்டான். சந்தேகத்தின் பலனை, கலைவாணிக்குக் கொடுக்கப் போனான்...

“ஆனாலும் கல்யாணத்தை நிறுத்தனும் அத்தான்".

“குளத்துக்கு கோவிச்சுட்டு... குண்டி கழுவாமல் போனானாம் ஒருத்தன். ஒனக்கு என்னமோ சொன்னியே. அந்த இழவு பூச்சி... அது இருக்குமுன்னால், நீ சொல்லாமலே... நானே கல்யாணத்தை நிறுத்துவேன்... கலைவாணி... எனக்கு கூடப் பிறந்த சித்திமகள் என்கிறதை மறந்துட்டே... நீ எனக்கு ஒரு கண்ணுன்னா... அவள் மறுகண்ணு... எதுக்கும் ஒனக்கு சந்தேகம் வந்தால்... அதோ அந்த வயலுல நிற்கார் பாரு... கூன் போட்ட கிழவன்.... அவர்தான் நாட்டு வைத்தியர்... பேச்சிமுத்து... புறப்படு... நாடி பார்ப்போம்”.

மனோகருக்கு, மனம் லேசானது, ஒடிப் போன மகிழ்ச்சி, அலையலையாய் புதுவேகத்துடன், வட்டியும் முதலுமாய் திரும்பி வந்தது. இந்த அத்தான், ஒருவேளை, வேறு எந்தப் பெண்ணாய் இருந்தாலும் கவலைப்பட மாட்டார்னு சொல்லலாம்... சொந்த சித்தி மகளை, கிணற்றில் தள்ளுவாரா... எனக்கு அது கிடையாது... இந்த சந்திரா....நல்லவள் ஆனால் கிராக்கு...

மோகன்ராம், மனோகரின் கையைப் பிடித்துக் கொண்டு, அவனோடு வயல்விட்டு வயல் தாண்டி, நாட்டு வைத்தியர் பக்கமாய் போனார்... அவர் வரப்போரம் உள்ள, யானை நெருஞ்சி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தார். ஏற்கெனவே உள்ள கூனோடு அவர் குனிந்ததால், செம்மறியாடு, புல்மேய்வதுபோல் இருந்தது...

‘என்ன மாமா இந்தப் பக்கம்...’

‘இந்த யானை நெருஞ்சி இலய... தண்ணீர்ல போட்டுட்டு... ஒரு மணி நேரம் ஊறவச்சி குடித்தால் தாது விருத்தியாகும்... சூடு தணியும்... கண் எரிச்சல் போகும்... எந்தப் பயலுக்கு இது தெரியுது...’

"மாமா, இவனுக்கும் இது தேவைப்படும்... கல்யாண மாப்பிள்ளை பாரும். ஏதாவது லேகியமாய்...”

"நாடி பார்க்காமல்... நான்மருந்து... லேகியம் கொடுக்கிறது இல்ல".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/68&oldid=1405031" இலிருந்து மீள்விக்கப்பட்டது