பக்கம்:பாலைப்புறா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 பாலைப்புறா

சொன்னதுதான். ஒரு அங்குலம், அந்த பக்கமோ, இந்தப் பக்கமோ நகராது... வாறோம் மாமா...’

மனோகர், பேச்சிமுத்து தாத்தாவை பிரமிப்பாய் பார்த்தான். பார்க்கப் பார்க்கப் பரவசம்... அசாத்தியமான பேரமைதி... அவர் சொன்னதையே திருப்பிச் சொல்ல வேண்டும் என்ற ஆசை... சட்டைப்பையில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து, அவரிடம், குருதட்சணையாய் நீட்டினான். அவருக்கு வந்ததே கோபம்.

‘ஏன்டா... மருமகனே.. ஒன் மச்சினன் என்னை பிச்சைக்காரன்னு நினைச்சானா? எனக்கும் வயல் வரப்பு இருக்குதுன்னு சொல்லுடா. இந்தாடா ஒன் நோட்டு’.

‘சின்னப்பயல்... தெரியாம செய்துட்டான்’.

மச்சானும், மைத்துனனும் மீண்டும் வயல் பக்கம் வந்தார்கள். மனோகர் அத்தானிடம் ஒரு சந்தேகம் கேட்டான்.

“எங்கப்பா... ரெண்டு ரூபாய் கொடுத்தார்னு இளக்காரமாய் சொன்னாரு. இப்போ 100 ரூபாயை தூக்கி வீசுறாரு.”

"இதுக்குப் பேர்தான் சித்தன் போக்கு... சிவன் போக்கு என்கிறது. ஆனால் கிழவன் எது சொன்னாலும், அது பலிக்கும். இனிமேல் நீ அது இருக்கு இது இருக்குன்னு புலம்பப்படாது.”

"எத்தான்... கல்யாணத்தை நான் நிறுத்தாட்டால், அந்த சந்திரா நிறுத்துவாளாம். என்னை மிரட்டுறாள்".

நீண்ட நாளாய் எதிரி கிடைக்காமல் போரடித்துப் போன மோகன்ராம், வெட்டரிவாள் மீசைகுலுங்க நின்றார். தோள்துடிக்க சூளுரைத்தார்.

“யார் வீட்டு கல்யாணத்தை யார் நிறுத்தறது? அவளுக்கு கெட்டகாலம்... இல்லாட்டால் இப்படிப் பேசமாட்டாள். சரி நீ பாட்டுக்கு ஒன் வேலைய பாரு. நான் அவளை பார்த்துக்கறேன். கவலைப்படாதே... நான் பிளான் போட்டுதான் சொல்றேன். கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியது என் பொறுப்பு. கல்யாணத்துக்கு முன்னாடி எலுமிச்சபழத்தை அறுத்து தலையைச் சுத்துவோமே அந்தப்பழம் மாதிரி அந்த பொம்புள டாக்டர் ஆக விரும்புனால்... ஆகிட்டுப் போறாள் ஒனக்கென்ன".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/70&oldid=1405033" இலிருந்து மீள்விக்கப்பட்டது