பக்கம்:பாலைப்புறா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 பாலைப்புறா

உட்காரச் சொல்லி, ஸ்டெதாஸ்கோப்பை எடுத்தாள். இதற்குள், சுகாதாரப் பார்வையாளர், சர்வ சாதாரணமாய் வந்தாள். வெளியே கதாநாயகித் தோரணையில் நின்றாளே அவள்தான். முஸ்தபா, சந்திரா மீதிருந்த கோபத்தை விசிட்டரிடம் காட்டினார். ஆனால் அவள் முகத்தைப் பார்க்க பார்க்க கோபம், தாபமானது.

‘இப்படி மெள்ளமாய் வந்தால் எப்படி சுலேகா? இதோ இந்த ரெண்டு உமனும் வேட்டையன்பட்டிக்காரங்க... அந்த ஏரியா ஹெல்த்ஒர்க்கர் யாரு’.

‘அதுவா... அது...’

‘இப்படி யோசித்து சொல்ற அளவுக்கு வேலை பார்க்கிறே? உருப்படும்...’

"ஒவ்வொருத்தியும்... மாறி மாறி... போயிட்டு இருக்காங்க... சார். வந்து... வந்து... பேர் சட்டுன்னு வர மாட்டங்கு... குதிரை மாதிரி குதித்து குதித்து நடப்பாள்...!”

‘உஷாவா... வேலையில் கழுதையா!’

“கழுதை நல்லா... வேலை பார்க்கும் சார்!”

“தமாஷான விஷயமில்லம்மா இந்த உஷாவோட ஏரியா கேஸுல்லாம் இங்கே எதுக்கு வரணும்?”

ஒரு நோயாளியின் வாய்க்குள் விளக்கடித்துப் பார்த்த டாக்டர் சந்திரா, சாடினாள்.

‘ஒவ்வொரு கிராமத்திலேயும் சம்பந்தப்பட்ட ஹெல்த் ஒர்க்கர் வீடு வீடாய்ப் போய்... குழந்தை பிறப்பை கண்டுபிடித்து, மூன்று நாளைக்குள் ஒரு டோஸ் சொட்டு மருந்து கொடுத்து... அடுத்த மாதமும் அதையே கொடுத்து... ஒன்றரை மாதத்தில் டிபிடி போட்டால்... இந்த அப்பாவிங்க எதுக்காக இங்கே வருவாங்க? ஏம்மா ஒங்களத்தான். ஒங்க குழந்தைக்கு மூணு மாதத்தில மூணு தடவை சொட்டு மருந்து கொடுக்கணும் கொடுத்தாங்களா’.

"இல்லியே... யாரு கொடுக்கணும்?”

சுகாதாரப் பார்வையாளர், ‘நீ என்ன கேட்கிறது’ என்பது மாதிரி, சந்திராவைப் பார்த்துவிட்டு, முஸ்தபாவை பொருட்பட பார்த்தபோது, அவர் தனது கடமையை ஒரு உரிமைபோல் காட்டினார்.

"நான் இன்சார்ஜ் டாக்டர்... நான் பேசிக்கிறேன்... சுலேகா இது சீரியசான விஷயம்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/74&oldid=1405039" இலிருந்து மீள்விக்கப்பட்டது