பக்கம்:பாலைப்புறா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 75

"இப்போதான் சார் ஞாபகம் வருது... போனவாரம் உஷாக்கிட்டே கேட்டேன்... அந்த ஊரு என்னென்னு சொன்னீங்க...?”

‘வேட்டையன்பட்டி...’

‘வேட்டையன் பட்டிக்குப் போனாளாம்... எல்லா வீடும் டிஎல்லாம், மறுநாள் போனாளாம். அப்பவும் டிஎல்லாம்...’

‘டி.எல்’ என்ற மந்திரச் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர் போல் டாக்டர் முஸ்தபா, எதிரில் நின்ற பெண்களை விரட்டினார்.

"டி.எல். அதுதான் மருந்து கொடுக்கிறவள் வந்த போது... ஒங்க வீட்டு டோர் குளோசாம்... அதான் வீட்டுக்கதவு பூட்டிக்கிடந்ததாம். ஊருக்குப் போங்க. ஹெல்த் ஒர்க்கர் வருவாள்!”

அந்த முன்னாள் வாய் வயிற்றுக்காரிகளில் ஒருத்தி முறையிட்டாள்.

"நாங்கல்லாம் கூலிக்காரிங்க சாமி... எப்போ வருவாங்கன்னு தெரிஞ்சால் காத்திருப்போம்”.

"எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? போங்க வருவாங்க”.

அந்தப் பெண்கள், பிள்ளையும் கையுமாய் தடுமாறித் தவித்துக் கொண்டிருந்த போது, டாக்டர் சந்திராவால் தாளமுடியவில்லை....

“கொஞ்சம் நேரம் நேரம் உக்காருங்க... நான் செக்கப் செய்யறேன்”.

அந்தப் பெண்கள் குழந்தைகளோடு சேர்ந்து, அவளைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். டாக்டர் முஸ்தபாவும், சந்திராவை வாங்கு வாங்கு என்று வாங்குவதற்காக, ஸ்டெதாஸ்கோப்பை தூக்கி, வீசிப் போட்டபோது

யானை, குட்டியை உரசியபடி நடப்பது போல், மோகன்ராம், மனோகரின் கழுத்தில் தோள் உரசவந்து கொண்டிருந்தார். டாக்டர் முஸ்தபா எழுந்து விட்டார். சுலேகா, ஒரு கும்பிடு போட்டுச்சிரித்தாள்.

கரை போட்ட எட்டு முழவேட்டி, அடிவாரத்தில் இரண்டாய்ப் பிரியும்படி சொந்த வீட்டுக்குள் வருவது போல் வந்தவருக்கு, அட்டெண்டர் அவசர அவசரமாய் ஒரு நாற்காலியை இழுத்துக் கொண்டு வந்தார். மோகன்ராம், உட்காருவது வரைக்கும் முஸ்தபா உட்காரவில்லை. சந்திரா... மனோகரை அதிர்ந்து பார்த்தாள். முஸ்தபா அவசரத்தோடு கேட்டார்.

“யாருக்கும் எதுவா? சொல்லுங்க... ஜீப் ரெடியா இருக்குது..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/75&oldid=1405051" இலிருந்து மீள்விக்கப்பட்டது