பக்கம்:பாலைப்புறா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 பாலைப்புறா

"இந்த டாக்டர் வேலையே இப்படித்தானோ... எப்போ பார்த்தாலும் ஆபத்து... இல்லன்னா... விபத்து... இது பற்றிதான் ஞாபகம் வரும் போலிருக்கு. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிறது மாதிரி; நான் சுபகாரியமாய்த்தான் வந்தேன்... இவன் என் மச்சினன்... மெட்ராஸ் என்ஜினியர். இவனுக்கும் என் சித்தி மகளுக்கும் கல்யாணம்...!”

"இவரையும்... கலைவாணியையும் நல்லாவே தெரியும்...”

மோகன்ராம், நீட்டிய அழைப்பிதழை, டாக்டர் முஸ்தபா வாங்கிக் கொண்டார். டாக்டர் சந்திராவுக்கும் ஒன்று கொடுக்கும்படி சைகை செய்தார். உடனே மோகன்ராம் சத்தம் போட்டே பேசினார்.

"இவர்களுக்கு இல்லாத நோட்டிஸா? பேரு சந்திராதானே?... அம்மாகூட, வீட்டில் தனியா இருக்கிறவங்கதானே... அளவுக்கு மேலேயே கேள்விப்பட்டிருக்கேன்.... மனோகர் டாக்டரம்மாவுக்கு ஒன் கையாலயே கொடு... நீங்களும் கண்டிப்பா வந்துடுங்கம்மா... கல்யாணம் நல்லபடியா முடிந்தால், சுடலைமாடனுக்கு கிடா வெட்டுறதாய் நேர்த்திக் கடன். அதனால... நீங்க கல்யாணம் முடிஞ்சதும் வந்துடப்படாது. மறுநாள் பிரியாணி சாப்பிட்டுத்தான் வரணும், சுடலைமாடன் எங்க குலதெய்வம். சக்தி உள்ள மாடன். ஆனானப்பட்ட மலையாள மந்திரவாதி மகளை ராத்திரியோடு ராத்திரியாய் கற்பழிச்சவன்...நிறைமாத கர்ப்பிணியை 'ஊட்டு' வாங்குனவன்... ஏய் மனோகர் டாக்டரம்மா கிட்ட இன்னுமா கொடுக்கல?”

மனோகர், சந்திராவிடம், ஒரு முறைப்போடு, அந்த அழைப்பிதழை நீட்டினான். அப்போதும் அவள், அவன் முகத்தைப் பார்த்து, வேண்டாம் என்பதுபோல் தலையாட்டிக் காட்டிவிட்டு, வாங்கிக்கொண்டாள். மோகன்ராம், ‘டாக்டர்... கொஞ்சம் வெளிய வாரீங்களா!’ என்று முஸ்தபாவை கேட்க, அவர் ‘பார்த்தியா என் செல்வாக்கை’ என்பது மாதிரி டாக்டர் சந்திராவைப் பார்த்துக்கொண்டே வெளியேறினார்.

முன்னால் போனவர்களின் முதுகுகளையே பார்த்த சந்திரா, கையில் திணிக்கப்பட்ட அந்த கவரைப் பார்த்தாள். அதை அங்குமிங்குமாய் கோபத்தோடு கிழித்துவிட்டு, அழைப்பிதழைப் பார்த்தாள். பொன் முலாம் பூசப்பட்டது போன்ற இரட்டைக் கார்டுகள். முதல் பக்கம், இரண்டு கரங்கள் ஒன்றை ஒன்று கோர்த்திருந்தன. இடம், பொருள், தேதி வகையறாக்கள்... இரண்டாவது பக்கம் தமிழ் அழைப்பு... மூன்றாவது பக்கம், தவசிமுத்து மிஸ்டராகவும், அவர் மனைவி மிஸ்ஸஸ் சீதாலட்சுமி தவசிமுத்துவாகவும் மாறிய ஆங்கில அழைப்பிதழ்... நான்காவது பக்கம், நல்வரவை விரும்பும் நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள்; இந்த மோகன்ராம், அவர் மனைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/76&oldid=1405054" இலிருந்து மீள்விக்கப்பட்டது