பக்கம்:பாலைப்புறா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 பாலைப்புறா

உண்மையைத்தான் எழுதுவேன்னு வீம்பு பிடித்தீங்க, குடிக்காதவனை குடிபோதையில் இருந்ததாய் சர்டிபிகேட் கொடுக்கமாட்டேன்னு கத்துவீங்க. எத்தனை போலீஸ்காரங்களை மூஞ்சில அடிச்சது மாதிரி திருப்பி அனுப்பி இருக்கீங்க? இப்போது அதுதான் அவங்களுக்கு மனசாட்சி. மோகன்ராமிடம்... இன்ன இடத்துக்கு தூக்கிட்டுப் போங்கன்னு இடம் பார்த்துக் கூட கொடுப்பாங்க’

டாக்டர் சந்திரா, அரண்டு போனாள். அர்த்த ராத்திரி கற்பழிப்புக் காட்சியை நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது. கண்களை மூடிக் கொண்டாள். உப்பு நீர்தான் கொட்டியது. முஸ்தபா இன்னும் எகிறினார்.

"மாவட்ட அலுவலகமே... இன்னும் முறைப்படி ரிப்போர்ட் அனுப்பல. நமக்கு அனுப்ப வேண்டியதும் இல்ல. ஒரு நோயாளி கேட்காமல் எய்ட்ஸ் கிருமி பற்றி நாம் மூச்சுவிடப்படாது... என்பது வாய்மொழி உத்தரவு. ஹெச்.ஐ.வி.க்கு ஒருத்தரை டெஸ்ட் செய்யுறதுக்கு முன்னாலயே, அவரைக் கலந்து ஆலோசிக்கனும் என்கிறது பொதுவிதி. எல்லாவற்றிற்கும் மேலே எய்ட்ஸ் கிருமி ஊடுருவி இருக்கிறது... உறுதிப்படுத்தப்படும் முன்னால், அதுபற்றி பேசப்படாது என்பது மெடிக்கல் தர்மம். இப்படி இருக்கையில் நீங்க எதுக்காக அதிகப் பிரசங்கித்தனமாய்...”

டாக்டர் சந்திரா, அழப் போனாள். வார்த்தைகளை மென்று மென்று விழுங்கி விழுங்கிப் பேசினாள்.

‘சொல்லி இருக்க மாட்டேன்தான். சொல்லி இருக்கக் கூடாதுதான். ஆனால் மனோகருக்கு கல்யாணம் நடக்கப் போறதால...’

"அவனுக்கு கல்யாணம் நடக்குதா... இல்ல கருமாந்திரம் நடக்குதா என்கிறது நமக்கு அப்பால்பட்ட விஷயம். நாம்தான் புத்திசாலி, மேல் அதிகாரிங்க முட்டாளுங்கன்னு முட்டாள்தனமா... நினைக்காதீங்க டாக்டர். இப்படித்தான், ஒங்களை மாதிரி ஒரு அவசரக் குடுக்கை டாக்டர், ஆர்வக் கோளாறினால் ஒரு இளைஞன்கிட்டே, ஹெச்.ஐ.வி. இருக்குறதாய் சொல்லி, இரண்டாவது டெஸ்டுக்கும் ரத்தம் எடுத்திருக்கு... அந்த டெஸ்டுலே, அந்த இளைஞனுக்கு ஹெச்.ஐ.வி. இல்லன்னு தெரியவந்தது. ஆனால், அதுக்குள்ளே அந்த இளைஞன் தற்கொலை செய்துவிட்டான். அவசர குடுக்கை டாக்டர் சஸ்பென்டாயிட்டார். ஏற்கெனவே நம்ம ‘பாஸ்' டாக்டர் சுகுமாருக்கு, ஒங்க மேல நல்ல அபிப்ராயம் இல்ல. நீங்க வெள்ளையன் பட்டி மருத்துவ முகாமுல டாக்டர் அசோகனை தூண்டிவிட்டதாய் நினைக்கிறார். இந்தப் பின்னணியில், நான் மட்டும் ஒரு வரி எழுதிப் போட்டால், சஸ்பென்ட் ஆக மாட்டிங்க... கைதாவீங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/78&oldid=1405058" இலிருந்து மீள்விக்கப்பட்டது