பக்கம்:பாலைப்புறா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்காமல், பூ வைக்க வேண்டிய இடத்தில் கூட பொன் வைக்கப்பட்டிருந்தது.

மணமேடையில் மனோகரோடு, நாற்காலியில் உட்கார்ந்திருந்த கலைவாணியும், அவளது நகை நட்டுக்களும் ஒன்றை ஒன்று பிரகாசப்படுத்தின. கழுத்தில் எலும்பு முக்கோணத்தை மறைக்கும் வைர நெக்லஸ். அதற்குக் கீழேயும், பக்கவாட்டிலும், படர்ந்த காசுமாலை... ஒரு ஜோசியர் அவள் ராசிப்படி தேர்ந்தெடுத்த ஊதாக்கல்... இந்த தோட்டோடு தலைமுடியில் ஏறிய 'நோட்டலு’... உச்சிமுதல் பிடறிவரை எடுக்கப்பட்ட வகிட்டை மறைக்கும் கங்கு... கவுண் கம்பு போன்ற கைவளை... மூக்கை அடைக்கும் வைர மூக்குத்தி... மார்பகம் மறைக்கும் ஆரம்... அகலப்பட்ட சங்கிலிகள்... ஆக மொத்தத்தில் அத்தனையும் அரை கிலோவிற்கு மேலே போகலாம்... மாமனார் தவசிமுத்தை அழ வைத்த மாப்பிள்ளை வீட்டாரின் பதினைந்தாயிரம் ரூபாய்க்கும் அதிகமான அகலப்பட்டை ஜரிகைப்பட்டு... ஒவ்வொரு இழையிலும் ஊடுருவிய ஜரிகை... மனோகரையும் சும்மா சொல்லப்படாது. பெரிய இடத்து வழக்கப்படி சூட்டும் கோட்டுமாய் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். பெண்ணின் அண்ணன் கமலநாதன் எதிர்மாலையாய் போட்ட எட்டு பவுன் சங்கிலி டாலடித்தது. அத்தான் மோகன்ராம் போட்ட தங்கக்கடிகாரச் செயின்... ஒளியடித்தது.

கலைவாணியை, வாடாப்பூ, தேனம்மா வகையறாக்கள் மொய்த்து நின்றன. ஆனந்தியைத்தான் காணவில்லை. ஏழைப் புடவையாலும், எவளும் போடாத பாம்படத்தாலும் சங்கடப்பட்டு வெளியேறப் போன கனகம்மாவை, கலைவாணி, கையோடு கோர்த்துக் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/80&oldid=1405060" இலிருந்து மீள்விக்கப்பட்டது