பக்கம்:பாலைப்புறா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 81

கலைவாணியின் பக்கத்தில் பெண்ணுக்குத் தோழியாய் குழலாமொழி என்று அழைக்கப்படும் அவளது அண்ணி குழல்வாய் மொழி... சந்தடிச் சாக்கில் பலராமனிடம் வலிய வலியப் பேசும் மீரா...

இந்த மேடைவாசிகளின் எதிர்ப்புறம் முன் வரிசையில் போடப் பட்ட மெத்தையிட்ட நாற்காலிகளில், போலீஸ் இன்ஸ்பெக்டர். தாசில்தார்... வட்டார வளர்ச்சி அதிகாரி... நேரு மைய ஒருங்கிணைப்பாளர்... மத்திய அரசின் செய்தி விளம்பர அதிகாரி முதலியோர் இவர்களுக்கு அடுத்த வரிசையில் டாக்டர் முஸ்தபா, டாக்டர் சந்திரா, சுகாதாரப் பார்வையாளர் சுலேகா... போலீஸ் இன்ஸ்பெக்டரும், தாசில்தாரும், டாக்டர்களும், மோகன்ராம் உபயம்... எஞ்சிய வி.ஐ.பி.க்கள் கலைவாணிக்காக வந்தவர்கள்; இதற்கு பக்கத்து வரிசையில் சென்னையில் இருந்து, மெனக்கெட்டு 'சார்ட்டட்’ பேருந்தில் வந்த மனோகரின் சகாக்கள்... கண்ணைக் கூசும் பெல் பாட்டங்களாகவும் ஸ்போர்ட்பேண்டுகளாகவும் இருந்தார்கள்.

கலைவாணியின் பெற்றோரான சுப்பையாவும், சீனியம்மாவும், மகளை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தார்கள். 'சுகந்தானே’ என்பது போல் நேயம் காட்டும் கண்கள்; சிரிக்கப் போவதுபோல், ஒரு இழையின் இடைவெளி கொண்ட உதடுகள்... தங்கத்தகட்டை உருட்டியது போன்ற மேனி... பூவரசுப் பூவின் உட்காம்பின் நிறம் - இவர்கள், இப்படி மகளை விழுங்கிக் கொண்டிருந்த போது, மாப்பிள்ளையின் பெற்றோரான தவசிமுத்துவுக்கும், மனைவி சீதாலட்சுமிக்கும் அங்கேயும் சண்டை... கல்யாண வீட்டிலேயே, சாப்பாடு போடுவதால் மணமக்களோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வரும் ஊரார்க்கு ஒரு காபி மட்டும் கொடுத்தால் போதும் என்பதில் இருவருக்கும் சம்மதமே... ஆனால் அதில் சர்க்கரை போட வேண்டும் என்கிறாள் சீதாலட்சுமி. கருப்பட்டி போதும் என்கிறார் தவசிமுத்து.

மனோகரின் மச்சான் மோகன்ராம், மாமனார் தவசிமுத்து வாங்கிக் கொடுத்த நரைத்த வேட்டியையும், ‘ரெடிமேட்' சட்டையையும், பெண்டாட்டி மேல் எறிந்துவிட்டு, ஒரு மாறுதலுக்காக, பட்டு ஜிப்பாவோடும், ஜரிகை வேட்டியோடும் அங்கும் இங்குமாய் சுற்றினார்... அவரது கண்கள் அவ்வப்போது டாக்டர் சந்திராவை நோட்டமிட்டன. சில சமயம் நேருக்கு நேராய்ப் பார்த்து எச்சரிப்பது போல் உருண்டன. சினிமாக்களில் தாலி கட்டும் நேரத்தில், தலைகால் புரியாமல் நடக்குதே, அப்படி அவள், வீரவசனம் பேசி கல்யாணத்தை நிறுத்திவிடக் கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை...

கலைவாணியும், மனோகரும், முகம் தெரிந்த முதல் மூன்று வரிசைக்காரர்களையும், அடிக்கடி பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/81&oldid=1405066" இலிருந்து மீள்விக்கப்பட்டது