பக்கம்:பாலைப்புறா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 83

மத்தியில் தேங்காயையும், அதற்கு மேல், பூக்குவியலில் வைக்கப்பட்ட பதினைந்து பவுன் தாலிக் கொடியையும் சுமந்த தாம்பாளம் கூட்டத்தினரிடம் சுற்றுலாவாய்ப் போனபோது, எல்லோருமே அதை தொட்டு, கண்களில் ஒற்றி மனமார வாழ்த்தினார்கள். ஆனாலும் இளவட்டங்களிடம் ஒரு கருத்துப் பரிமாற்றம். சைட் அடிக்க முடியாத சமயத்தில்தான்...

"வீடியோக்காரங்களை காணோமே!”

‘வராம இருக்கிறதே மேலு... நம்ம பொண்ணுகளை மறைப்பான். முடியுமுன்னால் முறைப்பான்.... தாலி கட்டுன பிறகும் ஒன்ஸ்மோர் கேட்பான்’

கலைவாணி, மீண்டும் ஒரு தடவை, டாக்டர் சந்திராவைப் பார்த்து, சாப்பிட்டு விட்டுப் போக வேண்டும் என்பது போல், வலது கையை வாய் வரைக்கும் கொண்டு போய், தனக்குத் தானே ஊட்டிக் கொள்வது போல் சமிக்ஞை செய்தாள். டாக்டர் சந்திரா மறுபுறமாய்த் திரும்பி, முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். அந்த ஈரத்துணியால் முகம் கழுவி தேய்த்தாள். எல்லோரும். அந்த மணமக்களை, சினிமா பார்ப்பது போல், பார்த்த போது, இவள் மட்டும், அவர்களை சதை நீக்கி, எலும்புக் கூடுகளாகப் பார்த்தாள். அவள் தலைக்கு மேல் கத்தி... கலைவாணியின் தலைக்கு மேல் வெள்ளம்...இனிமேல் அவளால் ஆகக்கூடியது ஏதுமில்லை.

திடீரென்று ‘புரோகிதரான' நாவிதர் கையாட்ட, மேளம் உச்சக் குரலில் ஒலிக்க, கனகம்மாவின் தலைமையில் பழைய தாய்க்குலம் குலவையிட, புதிய மகளிர் கைதட்ட, மனோகர், அந்தத் தங்கத்தாலியை கலைவாணியின் தலைவழியாக, கழுத்தில் போடப் போனான். கடைசி நேர உச்சக்கட்டமாக டாக்டர் சந்திரா கத்திவிடக் கூடாதே என்ற பயத்தோடு, கலைவாணியைப் பார்ப்பதற்குப் பதிலாய், சந்திராவையே கிலி பிடித்துப் பார்த்தான். அந்தத் தங்கத்தாலி, அவள் மூக்குத்தியை இழுத்து, இழுத்து தோட்டலைச்சாடி, கழுத்திற்குப் போனது. லிங்க உருவம் பொறித்த அந்த டாலர் செயின், கழுத்தைச் சுற்றியபோது, கலைவாணியின் மூக்கிலும், உதட்டிலும், காதுகளிலும் ரத்தத் துளிகள்; ஆனாலும் மணமகள், அதையும் மீறி மேடை கீழே விழப்போவது போல் நின்ற இயக்கப் பெண்களைப் பார்த்து நாணத்தோடு சிரித்தாள். அவள் மூக்கைத் துடைக்கப் போன குழல்வாய்மொழி, நீட்டிய கையை எடுத்துக் கொண்டாள். ரத்தம் தானாக உறையட்டும்... துடைத்தால் பொலபொலன்னு கொட்டும்.கூட்டத்தினர் வரிசையாக எழுந்து நின்றனர். சிறுவர் சிறுமியர் மாடியில் போடப்பட்ட வாழை இலைகளுக்கு முண்டியடித்தனர். இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/83&oldid=1405068" இலிருந்து மீள்விக்கப்பட்டது