பக்கம்:பாலைப்புறா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 பாலைப்புறா

அத்தனை புள்ளிகளும், பரிசு கொடுக்காமலே, மேடைக்குப் போய், மணமக்களை வாழ்த்திவிட்டு இறங்கினார்கள். ஆனால், டாக்டர் சந்திரா மட்டும்... கையோடு கொண்டு வந்த ஒரு பார்சலை, அவர்களிடம் பொதுப்படையாய் நீட்டினாள், பேசியபடியே கொடுத்தாள்.

"இதைப் பெட்ரூம்ல, போய் பிரிச்சுப்பாருங்க... அங்கேதான் பிரிக்கணும். ஒரு பரிகாரம்”.

மேடை ஏறிவிட்டு, கீழே நின்ற டாக்டர் முஸ்தபா, சந்திராவைக் கையாட்டிக் கூப்பிட்டார். அவளும், அவருக்குக் கட்டுப்பட்டவள் போல் பெட்டிப்பாம்பாய்க் கீழே இறங்கினாள். இதற்குள் சுற்றமும் நட்பும் பரிசுகளோடும், பணச் கவர்களோடும் மேடை ஏறினார்கள். பொதுவாக கிராமத்துக் கல்யாணங்களில், பெண்ணுக்குக் கொடுக்கப்படும் பணக்கவர்கள், அவளுடைய பிறந்த வீட்டிற்கும், மாப்பிள்ளைக்குக் கொடுக்கப்படுபவை அவன் வீட்டுக்கும் போகும். இந்த ஊர்விதிக்கு விலக்காய், தவசிமுத்து, மருமகள் பக்கமாய் முண்டியடித்துப் போய், கலைவாணியிடம் நீட்டிய பார்சல்களையும், கவர்களையும், வெடுக் வெடுக்கென்று பிடுங்கினார். மனைவி சீதாலட்சுமி, மகன் பக்கம் நின்று கொண்டு, அவனிடம் நீட்டப்பட்டதை வாங்கி வாங்கி, மனதுக்குள்ளே எண்ணி எண்ணி, மோகன்ராம் மனைவியும் பெரிய மகளுமான 'ஆந்தைக் கண்ணி' சகுந்தலாவிடம் 'பத்திரம் பத்திரம்’ என்றபடியே கொடுத்தாள். இதைப் பார்த்துவிட்டு, கணவரிடம், சீனியம்மா கிசுகிசுத்தபோது, அவரோ "‘ஆசைக்கு வெட்கமில்ல’ என்கிற பழமொழி சும்மாவா வந்திருக்கும்... விட்டுத் தள்ளு. மாப்பிள்ளை முகத்துக்காக கொடுத்தோம்... கையில் எட்டாயிரம் ரூபாய்... இந்தியா முழுசும் ஏரோப்பிளேன்ல சுத்துறது...இதை மாதிரி வேலை... இந்த வயசுல யாருக்கும் கிடைக்காது" என்றார். உடனே சீனியம்மா ‘அப்போ நம்ம ஆசைக்கும் வெட்கமில்லாமப் போயிட்டு, தராதரம் தெரியாதவங்களை... சம்பந்தி ஆக்கிட்டோம்... இங்க பாருங்க... ஊர் ஜனமே சிரிக்கு என்றாள்; சுப்பையா, மனைவியின் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/84&oldid=1405069" இலிருந்து மீள்விக்கப்பட்டது