பக்கம்:பாலைப்புறா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

அந்த மாடியின் ஒற்றை அறையில், மனோகர், கட்டிலில் கம்பீரமாகவோ அல்லது குழைந்துபோயோ கிடக்காமல், அருகே உள்ள சாய்வு நாற்காலியில் சோர்ந்து கிடந்தான். கல்யாண அலைச்சல்; சென்னையில் இருந்து வந்த சகாக்களை, குற்றாலத்துக்கு அனுப்பி வைத்தது போன்ற வேலைப் பளு மட்டும் காரணம் அல்ல... அவன் மனதுள், கலைவாணியைத் தள்ளிவிட்டு, டாக்டர். சந்திரா குஸ்தி போட்டாள். ஊசியும், கையுமாய் நெருங்கிக் கொண்டிருந்தாள். ஒரு தனிப்பட்ட சண்டையிலோ அல்லது நாடுகளுக்கிடையே நடக்கும் போரிலோ வெற்றி என்பது இறுதியில் வெறுமையே என்று எப்போதோ படித்தது, அப்போது அவனைப் பாடாய்படுத்தியது. ‘அடாவடி' சந்திராவின் கண்முன்னால் கல்யாணத்தை நடத்திக் காட்ட வேண்டும் என்ற பழைய வேகம், புதிய பயமாக உருவெடுத்தது. கலைவாணிக்கு ‘அது’ தெரியாது என்பது நிச்சயமாகிவிட்டது. அப்படி இருக்கையில் இந்த சந்திரா, வேண்டுமென்றே சொல்லியிருக்க மாட்டாள்... அப்படிப்பட்டவளாக அவள் தெரியவில்லை. சொன்னது தப்பாக இருக்கலாம்... ஆனால் அதில் உள்நோக்கம் கிடையாது... ஒருவேளை... அவள் சொன்னது மாதிரி...

மனோகர், மேற்கொண்டு நினைக்கப் பயந்தான்... டாக்டர் சந்திராவை மனதில் இருந்து, வலுக்கட்டாயமாய், ரணத்தோடு பிய்த்துப் போட்டுவிட்டு, அந்த இடத்தில் நாட்டு வைத்தியமும், நல்வாக்கு தந்தவருமான பேச்சிமுத்துவை பொருத்திப்பார்த்தான். சரியாக பொருந்தவில்லை... கீழே விழப்போவதுபோல் ஆடிக் கொண்டிருந்தார் பேச்சிமுத்து...

வளையல் சத்தம் கேட்டு, மனோகர் திரும்பிப் பார்த்தான்... கலைவாணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/85&oldid=1405070" இலிருந்து மீள்விக்கப்பட்டது