பக்கம்:பாலைப்புறா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 பாலைப்புறா

அவரு இங்கிருந்து போனதை பார்த்தேன். இந்த பார்ஸல் திருடுறதுக்கு வந்திருப்பார். திறந்து பார்த்ததும் விட்டுட்டார்...”

"அவரு கிட்டயே கொடுங்க... ஒங்களுக்கு தம்பி... தங்கை பிறக்கமாட்டாங்க”

"நான், யூஸ் பண்ணப் போறேன்”.

"வேண்டாம், உடலுறவு என்கிறது குழந்தை பெறுவதுக்காக மட்டும் கடவுளாய் கொடுத்த வசதின்னு மகாத்மா காந்தி சொன்னதுல எனக்கு நம்பிக்கை; நமக்கும் கழுதை வயசாயிட்டுது... சீக்கிரமாய்... சீக்கிரமாய்...”

கலைவாணி, மனோகரின் கழுத்தில் கைகளை கோர்த்துக் கொண்டாள். பிறகு எழுந்து, அவன் கையைப் பிடித்து "எழுந்திருங்க” என்று இழுத்தாள்... எழுந்தவனை இறுகத் தழுவி கொண்டாள். உடனே அவன், எல்லாம் மறந்த ஆளாகிவிட்டான். அவளைச் சேர்த்துப் பிடித்து, அவள் முதுகை மார்பில் சாய்த்து, வாயை கன்னத்தில் வைத்தபடி, அவளை நகர்த்தி, நகர்த்தி, அவள் கையைத் தூக்கி டியூப் லைட் ஸ்விட்சில் வைத்து அழுத்திவிட்டான். இருவரும், வண்ண ஒலிக் கதிரில், கட்டிலில் தொப்பென்று விழுந்தார்கள். ஒருத்தரோடு ஒருத்தர் பின்னிக் கொண்டார்கள். இருவரும் எல்லைகள் அற்று போனபோது...

தலைக்கு மேலே, ஒரு டக். டக்... சத்தம்... கலைவாணி, ஆடைகளைய கட்டிலில் உட்கார்ந்தாள். தலைப்பக்கத்துச் சுவரில் தொட்டால் பிடிக்கக் கூடிய தொலைவில், எலி மாதிரி உப்பிப் போன ஒரு பெரிய பல்லி, வண்ண விளக்கு கூச்சத்தில் சுவர் ஏறி இருக்கக் கூடிய ஒரு கரப்பான் பூச்சியை, பின் பக்கமாய் பிடித்து தின்று கொண்டிருந்தது. அதன் வாயில் குற்றுயிரும், குலையுயிருமாய் துடித்த அந்தப் பூச்சியை, அந்தப் பல்லி, ஆட்டி, ஆட்டி, அதன் தலையை சுவரில் மோத வைத்தது.

எலியை மறிக்கும் பூனையையும், பூனையை மறிக்கும் நாயையும், நாயை மறிக்கும் சிறுவர்களையும் துரத்தும் கலைவாணிக்கு, என்னவோ போல் இருந்தது. ஒரு தடவை, மரத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு காக்கைக் குஞ்சுக்காக, கையில் ஒரு கல்லோடு, காவல் பார்த்தாள். இதனால், காக்கையிடம், தலையில் கொத்துப்பட்டவள். இந்தக் கோரக் காட்சியைத் தாள முடியாமல் கேட்டாள்.

"இந்த கரப்பான் பூச்சியைக் காப்பாற்ற முடியாதா?” “எப்படி முடியும். இப்போ தலைதானே மிச்சம்!”

கலைவாணி, பல்லியையும் அடிக்க முடியாமல், பாச்சனையும் காப்பாற்ற முடியாமல், அல்லாடினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/88&oldid=1405073" இலிருந்து மீள்விக்கப்பட்டது