பக்கம்:பாலைப்புறா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 93

பின்வரிசையில் உள்ள ‘கட்சோளி' மோனிகா வாதிட்டாள்.

"ஒரு கூட்டம் முக்கியம் இல்ல... அதைக் கூட்டுறது யார் என்கிறது தான் முக்கியம். நம் கலைவாணி இங்கே இருக்கிறவரைக்கும்...”

"அது என்ன நீ பெர்மனன்ட் மாதிரியும்... மிஸ்ஸஸ் மனோகர் என்னமோ டெம்பரரி மாதிரியும்...”

“இதுக்குப் பேர்தான் மாமி. ஜெனரேஷன் கேப் என்கிறது...ஒங்ககிட்ட சொல்லாததை எல்லாம்... மிஸ்ஸஸ் மனோகர் என்கிட்டே சொல்லி இருக்காள். அவளோட ஆசை எல்லாம், ஹஸ்பென்டை ஊருக்கு இழுத்துட்டுப் போய், ஒரு இன்டஸ்டிரியல் யூனிட்டை போட வச்சு, அரசோட மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை...’

கலைவாணி, மோனிகாவின் ஒற்றைநபர் கருத்துக் கணிப்பை அங்கேயே மறுத்தாள்.

“நோ நோ... அப்படில்லாம் கிடையாது. ஊருக்கு போகனுமுன்னு ஒரு ஆசை இங்கே வந்த ஒரு மாதம் வரைக்கும் இருந்தது. இப்போஅப்படில்ல... இங்கேயே அதுவும் ஒங்களோடயே இருக்கணும் என்கிறதுதான் என் விருப்பம். இந்தச்சங்கத்தை இடையில விட்டுட்டுப் போக மாட்டேன்".

எல்லாப் பெண்களின் கண்களும், ஒட்டு மொத்தமாய் கலைவாணியை மொய்த்தன. கெளரவம்... பார்க்காமல், வலியப் பேசிய இவளை, இந்த நல்லவளை ஆரம்பத்தில் பாவம்... 'பட்டிக்காடு’ என்று நினைத்தது, பிறகு இந்த நாராயணசாமிகளின் ஒரே மகளான மேகலாவை, நான்கைந்து படித்த பொறுக்கிகள், கேட் வரைக்கும் கிண்டலடித்து வந்த போது, இதோ இந்த கலைவாணி, சீறிப் பாய்ந்து ‘செருப்படி படுவீங்கடா' என்று சூளுரைத்தது நினைவுக்கு வந்தன. இன்னொருத்தி, சந்தேகத்தோடும், சந்தோஷமாகவும் கேட்டாள்.

‘அப்போ ஊர்லே செட்டில் ஆகிற எண்ணத்தை விட்டுட்டியா'.

கலைவாணி, ஆமாம்... என்பதுபோல் தலையாட்டி விட்டு, பின்னர் தன்னைத் தானே நம்ப முடியாதவளாகப் பார்த்தாள். மனோகருடன் குடித்தனம் நடத்த சென்னைக்கு வந்த ஒரு மாதம் வரை, கணவனுடன்துங்கிக் கொண்டிருக்கும் போதுகூட,துக்கமும், கனவும், கலைந்து, ‘ஏய் வாடாப்பூ, ! தேனம்மா...’ என்று வாய்விட்டுக் கத்தியபடியே படுக்கையில் இருந்து அவ்வப்போது எழுவதும், விழுவதும் நினைவுக்கு வந்தன. மனோகர் இல்லாத பகல் நேரங்களில், ஊர் நினைவும், அம்மாவின் கரிசனமும், அப்பாவின் மெளனப் பாசமும், அக்காவாகிப் போன அண்ணியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/93&oldid=1405086" இலிருந்து மீள்விக்கப்பட்டது