பக்கம்:பாலைப்புறா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 பாலைப்புறா

பெருந்தன்மையும், நினைவுக்குமேல் நினைவுகளாய் அல்லாட, அவள் துடியாய் துடித்துப் போவதுண்டு. கம்மாக்கரையிலும், வயல் வெளியிலும், சுற்றோசுற்று என்று சுற்றினாலும், இங்கே காய்கறிகாரப் பையன், மூன்று சக்கர சைக்கிள் மணியை அடிக்கும் போது மட்டுமே தெருவுக்குப் போவதும், அவளைத் தனிமைத் துயராய் வாட்டியதுண்டு... இதனாலேயே இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எந்தப் பெண் முகமாவது தெரிந்துவிட்டால், இவளே அவள் வீட்டுக்குப் போவதும், தனது ஊர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு பெருமூச்சு விடுவதும், 'நீங்க சொல்வதைப் பார்த்தால், எனக்கு ஒங்க ஊருக்குப் போகணும் போல தோணுது’ என்று இந்த கட்சோளி மோனிகா, சொன்ன போது, அழப் போனதும், நினைவுக்கு வந்தன. ஊர்க்காரத் தோழிகளிடம் இருந்து, பத்துப் பன்னிரண்டு கடிதங்கள் வந்தன. இவளும், உடனடியாய், வரிந்து கட்டி பதில் கடிதங்கள் எழுதி, இங்கிருந்தபடியே மகளிர் மன்றங்களை நடத்துவதுபோல் திருப்திபட்டுக் கொண்டதும், இப்போது சிறிது அபத்தமாகவே தெரிந்தது. இப்போதும், கடிதங்கள் எழுதுகிறாள். ஆனால் ஒரு கடிதத்திலேயே, எல்லோரையும் கேட்டதாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கிறாள். ஊரில் திருமணமான ஒரு வாரத்திற்குள், ஊரைவிட்டு அழுதழுது புறப்பட்டபோது, ஒரு பெரிய பெண்பட்டாளமே பின்னால் வந்ததும், அவளைச் சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ரயில் நிலைய அதிகாரிகளே, மாண்புமிகு பெண் அமைச்சர் செக்யூரிட்டி இல்லாமல் திடீர் வருகையை முடித்துவிட்டு திரும்புவதாக அவசரமாய் அனுமானித்து, ரயில்வே போலீசாரை அனுப்பியதும், சிரிப்பாய்ப் பொங்குகிறது. ஊர்க்காரிகளை, நன்றியோடுதான் நினைத்துப் பார்க்கிறாள், அதற்காக அந்த நன்றி பாராட்ட, ஊரில் ‘செட்டில்' ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லையே...

இதற்குள், திருமதி பாலா நாராயணசாமி எங்கே பேசி விடுவாளோ என்று சந்தேகப்பட்டு, திருமதி நாகராஜன், ‘கலவாளி! நீங்களே நம் மீட்டிங்கோட பர்பஸை சொல்லுங்க' என்றாள். திருமதி நாகராஜன், தன்னை திருடி ஆக்கியதால் சங்கடப்பட்ட கலைவாணி, என்னை நீங்க மிஸ்ஸஸ் மனோகர்ன்னு கூப்பிடுங்க என்று எப்போதாவது சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து, இப்போது கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைக்கப் போனாள்... இதற்குள் ஒரு இடைச்செறுகல்...

"காமாட்சி மாமி. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

“அதை ஏன் கேட்கிறே...? என் சின்ன பிள்ளையாண்டான் ரவிக்கு ஒரு கம்பெனியோட கம்ப்யூட்டர் கன்சல்டன்சி பிரிவிலே... வேலை கிடைச்சிருக்கு... கேம்பஸ் இன்டர்வியூவில இவன்தான் பர்ஸ்டு. சம்பளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/94&oldid=1405087" இலிருந்து மீள்விக்கப்பட்டது