பக்கம்:பாலைப்புறா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 பாலைப்புறா

தாண்டி உள்ளே வரப் போன மனோகர், வெளியிலேயே நின்றபடி கலைவாணி மீது கால்வாசிப் பார்வையை iசியபடியே பேசினான்.

‘ஐ அம் ஸாரி... என்னால முடியல. அதனாலதான் வந்திட்டேன்.'

எல்லோரும் அவனை குறுஞ்சிரிப்பாய் பார்த்துவிட்டு, கலைவாணியை நோக்கிக் கண்ணடித்தபோது, மனோகர், மனைவியிடம் முத்தமிட்டு, முத்தம் பெற்றுச் சொல்ல வேண்டிய ஒரு தகவலை, வாசலில் நின்றபடியே சொன்னான்.

"எனக்கு நியூயார்க்லே மூன்று மாதம் போஸ்டிங் கொடுத்திருக்கிறாங்க. எங்க கம்பெனி, அங்கே ஒரு மல்டி நேஷனல் கம்பெனிக்கு... கன்ஸல்டென்ட் கான்ட்ராக்ட் வாங்கி இருக்குது... அதை நிறைவேற்ற போற ஐந்து பேர் டீம்ல மெட்ராஸ்லே இருந்து என்னை செலக்ட் செய்திருக்காங்க. இந்த நல்ல செய்தியை இவள் கிட்டே சொல்றதுக்காக ஓடிவந்தேன்... வாறேன்”

கலைவாணி, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவனைக் கூப்பிடுவதற்காக நீண்ட கையை, இழுத்துப் பிடித்தாள். இதற்குள் இந்தக் கூட்டத்திலேயே வயதான திருமதி கல்யாணராமன், எழுந்து போய், மனோகரின் கையைப் பற்றி வீட்டுக்குள் கொண்டு வந்து, கூட்டத்தில் மத்தியில் நிறுத்தி விட்டு, அவன் நெற்றியின் இரு பக்கமும், தனது கைவிரல்களை ஊன்றி ஊன்றி, அவனுக்குத் திருஷ்டிப் பரிகாரம் செய்தாள். நியூயார்க்கில், மசக்கையில் இருக்கும் பேத்திக்கு, மாங்கா வடு, தேங்காய் மிட்டாய், தேன்குழல், ஊறுகாய், புளிச்சாதம் வகையறாக்களை கொடுத்து அனுப்பணுமே...

எல்லாப் பெண்களும் கைத்தட்டினார்கள். அது முடிந்ததும் மோனிகா கருத்துரைத்தாள்.

‘எல்லாம்... எங்க கலைவாணி வந்த நேரம்... இதை மறந்திடாதீங்க மிஸ்டர் மனோகர்...’

‘அதுமட்டுமில்ல மோனி... நாம் எப்போ கும்பலாய் இந்த வீட்டுக்குள்ளே கூடினமோ... அப்போதான் இந்த குட் நியூஸ் வந்திருக்குது’

‘இவளைக் கூட்டிட்டுப் போகாதீங்க சார்! இப்போதான் இந்த குடியிருப்பே களைகட்டுது’

‘அபசகுனமாய் பேசப்படாது... கலைவாணி இவரைத் தனியா விடாதே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/96&oldid=1405089" இலிருந்து மீள்விக்கப்பட்டது