பக்கம்:பாலைப்புறா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 பாலைப்புறா

நிறுவனத்தில் சேர்ந்திடுவேன். ஒன்னையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவேன். நம் குழந்தைகளோடு, நாம்... அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிடலாம்”

கலைவாணி, அவன் மார்பில் சாய்த்த தலையைத் தூக்கி, அவனை நேருக்கு நேராய் பார்த்துக் கேட்டாள்.

‘எந்தக் கம்பெனி...ஒங்களை நம்பி அனுப்புதோ... அந்தக் கம்பெனி சார்பிலே போயிட்டு... அப்புறம் ஏணியையே இடறி விடுவது நம்பிக்கைத் துரோகம் இல்லையா’.

‘விசுவாசமாய் இருக்கிறதுக்கு... கம்பெனி என்ன கட்டுன பெண்டாட்டியா’

‘விசுவாசத்தை துண்டாட முடியாது. ஒரு விசுவாசி என்பவர், எந்த விஷயத்திலும் தனக்குத்தானேயும், பிறத்தியார் எல்லோரிடமும் விசுவாசமாய் இருப்பவர்...’

மனோகர், நிரடு தட்ட அவளைப் பார்த்தான். அந்த சங்கடத்தை புரிந்து கொண்டவளைப் போல், கலைவாணி பேச்சைமாற்றினாள்.

"சரி... நாளைக்கு எல்லாவற்றையும், விலாவரியாய் பேசலாம். நீங்க நியூயார்க்குலயே செட்டில் ஆனாலும், அதுதான் என்னோட அயோத்தி; மத்ததுல்லாம் அசோகவனம்; இப்படியே நின்னா எப்படியாம்? இதைக் கொண்டாட வேண்டாமா...? எங்கேயாவது கூட்டிக்கிட்டுப் போங்க!”

"சாயங்காலம் போகலாம்... இப்போ மெடிக்கல் கிளியரன்சுக்கு ஜெனரல் ஆஸ்பத்திரி போறேன். சென்ட்ரல் ரயில்வே நிலையம் பக்கத்தில இருக்குதே அங்கேதான்...அப்போதான் விசா கிடைக்கும்”.

மனோகருக்கு, அப்படிச் சொல்லும் போது, நாக்கே நடுங்கியது. உடம்பும் ஆடியது. அதை மறைப்பதற்கோ என்னமோ, கலைவாணியைக் கட்டி அணைத்தான். முகத்திற்கு முகம் காட்டாமல், அவள் முதுகில் முகம் போட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/98&oldid=1405093" இலிருந்து மீள்விக்கப்பட்டது