பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

திருக்குறள்

தமிழ் மரபுரை


பாற்று அன்று - விருந்தினரை வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து தனித்துண்டல் விரும்பத்தக்க தன்று.

இனி, விருந்தினரை வெளியே வைத்துவிட்டுத் தனித்துண்டல் சாவா மருந்தாகும் என்று சிலர் சொன்னாராயினும், அது செய்யத்தக்கதன்று என வேறோர் உரையுமுளது. அது,

"நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று" (குறள் .222)


என்றாற் போல்வது.

சாவா மருந்து சாவாமைக்குக் கரணியமாகிய மருந்து. நோவா மருந்து, மூவா மருந்து, சாவா மருந்து என்னும் மூவகை மருந்துகளுள் சாவா மருந்து தலைசிறந்ததாதலின், உம்மை உயர்வுசிறப்பு.

அதிகமான் ஔவையார்க்கு அளித்த அருநெல்லிக்கனி பரிசில் போன்றதாதலின், ஈண்டைக்கு எடுத்துக்காட்டாகாது.

இனி, விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாம் (சாவையொக்கும்). அங்ஙனம் உண்பது சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்றும் பிரித்துப் பொருள் கொள்வர்.

83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று.

(இ-ரை) வைகலும் வருவிருந்து ஓம்புவான் வாழ்க்கை - நாள்தோறும் தன்னை நோக்கி வருகின்ற விருந்தினரைப் பேணுவானது இல்வாழ்க்கை: பருவந்து பாழ்படுதல் இன்று - வறுமையால் துன்புற்றுக் கெடுதல் இல்லை.

இது நாட்டு வளத்தையும் இல்லறத்தானின் செல்வநிலையையும் பொறுத்தது.

84. அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்.

(இ-ரை.) முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகமலர்ந்து நல்ல விருந்தினரைப் பேணுவானது இல்லத்தின்கண்; செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனமகிழ்ந்து வதிவாள்.