பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - மெய்யுணர்தல்

213


என்னும் நான்குஞ் சேர்ந்த இருபத்து நான்காகவே முடியும். சமணம், பவுத்தம் முதலிய நம்பா நாத்திக மதங்களைப்பற்றி இங்கு ஆராய்ச்சியில்லை.

திருவள்ளுவர் ஆரியர் வகுத்த முத்திருமேனி (திரிமூர்த்திக் கொள் கையைக் கொண்டவரல்லர். அவர் காலத்தில் அது தோன்றியிருக்கலாம். பிற்காலத்திலேயே அது வேரூன்றியதாக,

"தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக" (கலித். 3)

“உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்” (கலித். 9)

முதலிய கடைக்கழக இலக்கியச் சான்றுகளால் தெரியவருகின்றது. இறைவன் முத்தொழிலையும் முறையே பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் மூவரைக் கொண்டு செய்விக்காமல், தானே செய்கின்றான் என்பதே திருவள்ளுவர் கொள்கை. இனி, இறைவனை அவர் ஐங்கூறாகப் பகுத்திருக்கவும் முடியாது. இதன் விரிவையும் விளக்கத்தையும் என் தமிழர் மதம்' என்னும் நூலுட் கண்டுகொள்க. சிவன் என்பதும் திருமால் (மாயோன்) என்பதும் இருசார்த்தமிழர் இறைவனுக்கு இட்ட பெயர்களே.


ஓகத்தின் (யோகத்தின்) எண்ணுறுப்புகளாவன:

(1) ஒழுக்கம் (இயமம்) - பொய், கொலை, களவு, காமம், பொருளாசை ஆகிய ஐந்தையுங் கடிதல்.

(2) தவம் (நியமம்) - உடலை வருத்துதல், உள்ளத் தூய்மை, மெய்ப் பொருளாராய்ச்சி, பொந்திகை (திருப்தி), கடவுள் வழிபாடு ஆகிய வற்றை மேற்கொள்ளல்.

(3) இருக்கை (ஆசனம்) - மங்கலம் (சுவஸ்திக, கோமுகம் (கோமுக) தாமரை பத்ம), மறம் (வீர), மடங்கல் (கேசரி), வீறு (பாத்திர), முத்தம் (முக்தி), மயில் (மயூர, ஏமம் (சுகி) முதலிய 108 இருக்கை வகைகள்.

(4) வளிநிலை (பிராணாயாமம்) - இழுக்கை யூரகம்),விடுகை (இரேச கம்), நிறுத்தம் (கும்பகம்) என்னும் மூவகையால் மூச்சை யடக்கி யாள்கை.

(5) ஒருக்கம் (பிரத்தியாகாரம்) - மனத்தைப் புலன்கள்மேற் செல்லா வாறு மடக்குதல்.