பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

9



(4) கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற திருச்சிற்றம்பலக் கோவை 400 துறைகளும் 25 கிளவித்தொகைகளுங் கொண்டிருக்க, திருக்குறட் கோவையாகிய இன்பத்துப்பால் 25 தலைப்பின்கீழ்க்கிளவித் தொகைப் பாகுபாடின்றித் துறைகளே கொண்டிருத்தல்.

தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 400 துறைகள் குறிக்கப்பட்டுள. அவற் றுட் சில திருக்கோவையில் இல்லாதன: சில பெயர் குறிக்கப் பெறாதன; சில நுண்வேறுபாடுகளைக் கொண்டன. திருக்கோவைக்குப் பிற்பட்டவற்றில் ஏறத்தாழ 45 துறைகள் கூடியுள்ளன. திருவள்ளுவர் அறநூன்முறையில் ஒருமனை மணம்பற்றிய இன்றியமையாத துறை களையே கூறினாரேனும், அவற்றின் சுருக்கமும் பெயர் முறையும் திருக்குறளின் முன்மையைத் தெளிவுறக் காட்டுவனவாம்.

(5) திருவள்ளுவரின் பிற்காலத் தொழிலாகத் தெரிகின்ற நெசவிற்கு நூலுதவினதாகச் சொல்லப்பெறும் ஏலேலசிங்கர் என்னும் சோணாட்டுக் கடல் வணிகர் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டாயிருந்தமை.

(6) கிறித்துவிற்குப் பிற்பட்ட நூல்களை அல்லது நிகழ்ச்சிகளைப்பற்றித் திருக்குறளில் யாதொரு குறிப்புமின்மை.

கடைக்கழகச் செய்யுள்களில் கூறப்பெறும் யவனரைப்பற்றித் திருக்குறளில் ஒரு குறிப்புமின்மை கவனிக்கத்தக்கது.

தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட தென்பதற்குச் சான்றுகள்:

(1) தொல்காப்பிய நூற்பாக்களையும் மக்கட் பகுப்பையும் திருவள்ளுவர் தழுவியிருத்தல்.

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப" (1434)

என்னும் தொல்காப்பிய நூற்பா.

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் " (28)

என்னுங் குறளில் தழுவப்பெற்றுள்ளது.

"எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை யின்மை யான" (981)

என்னும் தொல்காப்பிய நூற்பா.