பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

19



“சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை", (1031)

"உழுவா ருலகத்திற் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து" (1032)

என்பன ஆரியத்தைக் கண்டித்தனவாகும். பிறவற்றைக் கடிந்ததை ஆங்காங்கு நூலுட் காண்க.

8. திருக்குறட் சிறப்பு

உலகியல் இனிது நடைபெறுதற்கு இன்றியமையாத நூல் நிலைமை யும் இல்லறமும் துறவறமும் அரசியலும் கணவன் மனைவியர் காமவின்ப மும்பற்றி, உண்மையாகவும் நடுநிலைமையாகவும் எல்லார்க்கும் ஒப்பமுடிந்த வகையிலும், தலைசிறந்த பாவாலும் சிறந்த சொற்களாலும் இலக்கண வழுவின்றி இருவகை யணிகளுடன், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூல் திருக்குறள் ஒன்றே. இருமைக்கும் உதவும் விழுமிய பொருளை அணிமிக்க குறள்வெண்பாவாற் பாடியிருப்பது, பன்மணி பதித்த ஓவிய வேலைப்பாட்டுப் பொற்கலத்தில் அரசர்க்குரிய அறுசுவை யுண்டியைப்படைத்தாற் போலும். குறள் வெண்பாவால் ஆனதினாலும், வீடுபேற்று வழியைக் கூறி மறைத்தன்மை பெற்றதினாலும், திருக்குறள் என அடையடுத்த ஆகுபெயர் பெற்றது.

இருவகை மொழிநடையுட் சிறந்தது செய்யுள். இருவகைச் செய்யுளுட் சிறந்தது பா. நால்வகைப் பாவுட் சிறந்தது வெண்பா.

"காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம்
பேசும் உலாவிற் பெதும்பைபுலி – ஆசு
வலவர்க்கு வண்ணம் புலியாமற் றெல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி." (தனிப்பாடல்)

ஐவகை வெண்பாவுட் குறுகியது குறள் வெண்பா. பயனில் சொல் பகர்வானைப் பதடியென்னும் திருவள்ளுவர், சொற்சுருக்கம்பற்றிக் குறள் வெண்பாவையே தம் நூற்குத் தெரிந்துகொண்டார்.

திருவள்ளுவரின் பாச்சிறப்பை,

"பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனதம்
ஆவிற் கருமுனியா யானைக் கமரரும்பல்
தேவிற் றிருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா"

என்னும் திருவள்ளுவ மாலைப் பாவும்; நூற்சிறப்பை,