பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

21



இங்ஙனம் திருக்குறள் எல்லா வகையிலும் ஒப்புயர்வற்ற உலகத் தமிழ் நூலாம். அதனால், முப்பொருண்மைபற்றி முப்பால், முப்பால் நூல் என்றும்: ஆசிரியனை நோக்கி வள்ளுவம், வள்ளுவநூல், வள்ளுவப்பயன் என்றும்; உண்மை யுரைத்தல்பற்றிப் பொய்யா மொழி என்றும்; மந்திரத்தன்மைபற்றி வள்ளுவர் வாய்மொழியென்றும், மறைத்தன்மை பற்றித் தமிழ்மறை, பொதுமறை என்றும், தெய்வத்தன்மைபற்றித் தெய்வநூல் என்றும்;

"வேம்புங் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குத லின்றி வழிநனி பயக்குமென்
றோம்படைக் கிளவியின் வாயுறுத்தல்"
(தொல். செய். 108)

பற்றி வாயுறைவாழ்த்து என்றும் பெயர் பெற்றுள்ள தென்க.

முதனூன்மை: திருக்குறள் எல்லாவகையிலும் தூய முதனூலாகும். அறம்பொரு ளின்பம் என்னும் முப்பொருளையும்பற்றித் திருக்குறள் முறையிற் கூறும் வடநூல் ஒன்றுமில்லை. நான்முகன் (பிரமன்) முதலில் 'திரிவர்க்கம். என்னும் பெருநூலைச் செய்தானென்றும், அதை வியாழனும் (பிருகற்பதி) வெள்ளியும் (சுக்கிரன்) சுருக்கி முறையே பார்கற்பத்தியம்.. சுக்கிரநீதி என்னும் நூல்களை இயற்றினரென்றும். திருவள்ளுவர் 'திரிவர்க்கம்' போல் அறம்பொரு ளின்பம்பற்றி நூல் செய்ததனாலேயே நான்முகனின் தோற்றரவு (அவதாரம்) எனக் கருதப் பெற்றாரென்றும், தமிழ்ப் பற்றில்லாத பிராமணத் தமிழ்ப் புலவர் கூறுவர். ஒருவரோ பலரோ கட்டிப் பாடிய திருவள்ளுவ மாலையில்,

"நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூன்முறை"

என்று உக்கிரப்பெருவழுதி பெயரிலுள்ள பாவும்,

"மெய்யாய வேதப் பொருள்விளங்கப் – பொய்யாது
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்"

என்று காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெயரிலுள்ள பாவும். எல்லா அறநூல்களையும் மறைநூல்களையும் ஆரியவேத வழிநூலாகக் கொள்ளும் பண்டை மரபுபற்றிக் கூறியதைக் கொண்டு. அவர் அங்ஙனம் கூறுகின்றார் போலும்!