பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

25



மறையியல்

திருக்குறள் இம்மைக்குரிய ஒழுக்க வரம்பு கூறும் அறநூலாக மட்டுமன்றி, மறுமையில் உயர்பிறப்போ விண்ணின்பமோ வீட்டின்பமோ பெறுதற்குரிய வழிகாட்டும் மறைநூலாகவுமிருப்பதால், தமிழ்மறை, பொதுமறை. வள்ளுவர் வாய்மொழி, தெய்வநூல் எனப் பெயர் பெற்றுள்ளது.

“இம்மை மறுமை யிரண்டு மெழுமைக்குஞ்
செம்மை நெறியிற் றெளிவுபெற - மும்மையின்
வீடவற்றி னான்கின் விதிவழங்க வள்ளுவனார்
பாடின ரின்குறள்வெண் பா.”
(திருவள்ளுவமாலை)

இயல்வரையறைச் சிறப்பு

பொருள்கட்கும் பண்புகட்கும் வினைகட்கும் இயல் வரையறை (Definition) கூறுவதில் திருக்குறள் தலைசிறந்ததாகும்.

"அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்",
(30)

"வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்",
(291)

"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு"
(261)

நவில்தொறும் நயமுடைமை

இதுவரை பகுதிக்கும் முழுமைக்கும் சுருக்கமாகவும் பெருக்கமாகவும் திருக்குறட்குத் தோன்றியுள்ள உரைகள் ஏறத்தாழ நூறும், அது மொழி பெயர்க்கப் பெற்ற மொழிகள் இருபதும் ஆகும். ஆயினும், இன்னும் அச் சுரங்கத்தினின்று கருத்துமணிகள் தோண்டத் தோண்ட மேன்மேலும் வந்துகொண்டே யிருக்கின்றன.

எ-டு:

"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு."
(739)

நாடு என்ப - சிறந்த நாடென்று சொல்லப்படுவன; நாடா வளத்தன - பிற நாடுகளின் உதவியை வேண்டாது தமக்கு வேண்டிய பொருள் வளங்களையெல்லாம் தம்மகத்தே கொண்டனவாகும்; நாட வளந்தரு நாடு - பிற நாட்டுதவியை நாடுமாறு குன்றிய வளங் கொண்ட நாடுகள்; நாடு அல்ல - சிறந்த நாடாகா.