பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

திருக்குறள்

தமிழ் மரபுரை


இருவினையுஞ் சேராவென்றும் கூறினார். மக்கள் எத்துணைப் பெரியோராயிருப்பினும் அவரின் அறிவாற்றலுங் காலமுங் குறுகிய வரையறைப்பட்டிருப்பதனாலும், அவரை மகிழ்விக்கக் கூறும் புகழுரைகளெல்லாம் உயர்வு நவிற்சியும் இன்மைநவிற்சியுமே யாதலாலும், எல்லாவாற்றலும் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் புகழே பொருளுள்ள புகழ் எனப்பட்டது. புரிதல் - விரும்பிச் சொல்லுதல். இறைவன் - எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் - தங்குதல். நல்வினை பிறவிக்கேதுவாவது கடவுள் வழுத்தொடு கூடாத போதும் தீவினையொடு கலந்த விடத்துமாம்.

6. பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

(இ-ரை.) பொறிவாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளையும் வழியாகக்கொண்ட ஐவகை யாசைகளையும் விட்ட இறைவனது; பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் - மெய்யான ஒழுக்கநெறியில் ஒழுகினவர்; நீடுவாழ்வார் - வீட்டுலகில் என்றும் இன்புற்று வாழ்வார்.

ஊறு, சுவை, மணம், காட்சி, ஓசை என்பன ஐவகை ஆசைப் புலன்கள். ஊறென்பது உடம்பால் தொட்டின்புறுதல். இறைவன் இயல்பாகவே ஆசையில்லாதவனாதலால், ஐந்தவித்தான் என்னும் பெயரும் சமணரை வயப்படுத்துமாறு சமண நெறியினின்று எடுத்தாண்டதே. "ஐவரை வென்றோன்" என்று இளங்கோவடிகளுங் கூறுதல் காண்க (சிலப்.10: 168). ஒழுக்கநெறி இறைவனாற் சொல்லப்பட்டது அல்லது அவனுக்கு ஏற்றது.

இந் நான்கு குறளாலும், இறைவனை இடைவிடாது நினைப்பாரும் வழுத்துவாரும், அவனெறி யொழுகுவாரும் வீடு பெறுவரென்பது கூறப்பட்டது.

7. தனக்குவமை இல்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது.

(இ-ரை.) தனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழுந் துன்பங்களையும் அவற்றால் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.

இம்மைக்கும் மறுமைக்கும் உரிய எல்லாப் பொருள்களையும் நலங்களையும், எல்லார்க்கும் என்றும் வரையாதளிக்கக்கூடிய வள்ளல் இறைவன்