பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - அறன்வலியுறுத்தல்

59



ஒல்லும் வகையாவது, இல்லற வினையை இடம்பொருளேவற்கு ஏற்பவும், துறவற வினையை உடம்புநிலைக்கும் உளநிலைக்கும் ஏற்பவும் செய்தல். செல்லும் வாய்கள் மனம் மொழி மெய் என்னும் முக்கரணங்கள். அவற்றாற் செய்யப் பெறுவன நல்லெண்ணம் நற்சொல் நற்செயல் என்பன. வாய் என்பது வழியை மட்டுமன்று இடத்தையுங் குறித்தலால், 'செல்லும் வாய்' என்பன எல்லா அறத்துறைகளுமாம்.

34.

மனத்துக்கண் மாசில லாத லனைத்தற
னாகுல நீர பிற.

(இ-ரை.) மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்-ஒருவன் தன் மனத்தின்கண் குற்றமற்றவனா யிருத்தலாகிய அவ்வளவே அறமாவது: பிற ஆகுல நீர - மற்றப் பூச்சும் ஆடையும் அணியுமாகிய கோலங்களெல்லாம் வீண் ஆரவாரத்தன்மையன.

மனம் தூய்மையாயிருப்பின் அதன் வழிப்பட்ட முக்கரண வினைகளும் தூய்மையா யிருக்குமாதலின். மாசிலா மனமே அறத்திற்கு அடிப்படை என்றவாறு. மனம் தூயதாயிருப்பின் வெளிக்கோலம் வேண்டாத தாயும், தீயதாயிருப்பின் வெளிக்கோலம் பிறரை ஏமாற்றுவதாயு மிருத்தலின் இருவழியும் பயனின்மை நோக்கி வெளிக்கோலத்தை வீண் ஆரவாரமென்றார். 'ஆதல்' வியங்கோளுமாம்.

35.

அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்.

(இ-ரை.) அழுக்காறு - பிறராக்கம் பொறாமையும்; அவா-அவ் வாக்கத்தின்மேற் செல்லும் ஆசையும்; வெகுளி - அதைப் பெறாதவிடத்து எழும் சினமும்; இன்னாச் சொல் - அதுபற்றி வருங் கடுஞ்சொல்லும்: நான்கும் இழுக்கா இயன்றது அறம் - ஆகிய இந் நான்கையும் விலக்கி நடந்ததே அறமாவது. (இழுக்கா = இழுக்கி).

36.

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.

(இ-ரை.) அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - யாம் இன்று இளைமையா யிருப்பதாற் பிந்தி முதுமையிற் செய்வே மென்று கடத்திவையாது, இன்றிருந்தே அறவினையைச் செய்து வருக: மற்று அது பொன்றுங்கால் பொன்றாத்துணை - பின்பு அவ்வறம் இறக்குங் காலத்து இறவாத் துணையாம்.