பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

திருக்குறள்

தமிழ் மரபுரை



இறத்தலாவது உடம்பினின்றும் உயிர் நீங்குதல். உயிர் நீங்கிய உடம்பு அழியவும், அதனாற் செய்யப்பட்ட அறம் அதனோடழியாது உயிரோ டொன்றிநின்று உதவுவதால், பொன்றாத்துணை யாயிற்று. நிலையாத உடம்பு நிலையும் பொழுதே நிலைக்கும் பயனைப் பெற்றுக் கொள்க என்பது ஆசிரி யரின் அன்பார்ந்த அறிவுரை.

37.

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

(இ-ரை.) அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இது வென்று உரையளவையால் ஒருவர் அறிவிக்க வேண்டுவதில்லை; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - பல்லக்கைச் சுமப்பானோடு அதில் ஏறிச் செல்வானிடைப்பட்ட காட்சியளைவையாலேயே அது அறியப்படும்.

இதுவே ஆசிரியர் கருத்தென்பது, பின்னர் அவர் ஆங்காங்கு நூலிற் கூறும் கூற்றுகளாலும், பல்பிறவியும் பழவினையும்பற்றி அவர்க்கிருந்த நம்பிக்கையாலும்,


“செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவ மென்னவறிந் தன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்”
( நல்வழி,17)

என்னும் ஒளவையார் கூற்றாலும்,

"Need not in words to dwell on virtue's fruits: compare
The man in litter borne with that toiling bear!
"

என்னும் போப்பையர் மொழிபெயர்ப்பாலும் அறியப்படும்.

'பல்லக்கைச் சுமப்பாரையும் அதில் ஏறிச் செல்வானையுங் காட்டி இதுதான் அறத்தின் பயன் என்று கூறாதே' என்பதை இக் குறளுரையாகக் கூறுவது, இக்காலத்திற் கேற்குமேயன்றி ஆசிரியர் கருத்தாகாது.

ஆறென்பது வழி. அறத்தின் வழிப்பட்ட பயனை ஆறென்றார். அறியப்படும் என்பது சொல்லெச்சம்.