பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - பாயிரவியல் - அறன்வலியுறுத்தல்

61



38.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

(இ-ரை.) வீழ்நாள் படாமை நன்று ஆற்றின் - செய்யாது வீணாகக் கழியும் நாள் இல்லாவாறு ஒருவன் நாள்தோறும் அறத்தைச் செய்துவருவானாயின்; அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்-அச் செயல். அவன் இவ் வுலகில் உடம்போடுகூடி வாழும் நாள் வரும் வழியை அடைக்குங் கல்லாகும்.

மூவகைக் குற்றத்தால் வரும் இருவகை வினையும் உள்ளவரை உயிர் உடம்போடு கூடிநின்று அவ் வினைகளின் இருவகைப் பயனையும் நுகரு மாகலின், அந் நாளெல்லாம்: 'வாழ்நாள்' எனப்பட்டன. மூவகைக் குற்றம் காமம், வெகுளி, மயக்கம் என்பன. இவற்றை வடநூலார் அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என ஐந்தாக விரித்துப் பஞ்சக்கிலேசம் என்பர். அவற்றுள் அகங்காரம் மயக்கத்துள்ளும் அவா காமத்துள்ளும் அடங்கும். இருவகை வினை நல்வினை தீவினை என்பன. இருவகைப் பயன் இன்பந் துன்ப மென்பன. இனி. 'வாழ்நாள் வழியடைக்குங் கல்' என்பதற்கு, ஒருவரது நிலத்தினூடு தவறாகச் செல்லும் வழியிற் பிறர் செல்லாதவாறு வைத்தடைக்குங் கல்போல, வாழ்நாள் என்னும் தீயவழியில் உயிர் செல்லாவாறு வைத் தடைக்குங் கல் எனினுமாம். இது உருவகவணி.

'படாஅமை' இசைநிறை யளபெடை. வாழ்நாள் வழியடைத்தலாவது பிறவியை நீக்கி வீடுபெறுவித்தல்.

39.

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில.

(இ-ரை.) அறத்தான் வருவதே இன்பம் - அறவழியால் ஒருவர்க்கு வரும் இன்பமே உண்மையான இன்பமாவது; மற்று எல்லாம் புறத்த - வேறு தீய வழியில் வருவனவெல்லாம் இன்பம்போல் தோன்றினும் துன்பத்தின்பாற் படுவனவே: புகழும் இல - அதோடு அவை புகழுடையனவும் ஆகா.

இங்கு இன்பமென்று பொதுப்படக் கூறியது உலகின்பமாகிய சிற்றின் பத்தை: அறவழியல்லது வேறுவழியிற் பேரின்பம் ஒருவன் பெறமுடியா தாகலின். உலக வின்பம் ஒருபுல வின்பமும் பலபுல வின்பமும் ஐம்புல வின்பமாகிய முற்றின்பமும் என முத்திறப்படும். வண்ண வோவியமும் எழுவும் யாழும் இன்னடிசிலும் நறுவிரையும் மெல்லணைக் கட்டிலும் போல்வன, ஒருபுல வின்பமே தருவன: அழகிய வளமனையும் பல்வகைப்