பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - இல்வாழ்க்கை

69



பசி, தகை முதலிய இடையூற்றை நீக்கலின் 'ஆற்றினொழுக்கி' என் றார். இல்வாழ்வான் தன்மை அவன் வாழ்க்கைமேல் ஏற்றிக் கூறப்பட்டது. இல்லறத்தையுங் தவநெறியையும் ஊக்குவது, தவநெறியைமட்டுங் காப் பதினும் வலிமையுடைத்தாயிற்று. நோற்பர் என்பது ஆகுபொருட்சொல்.

49.

அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று.

(இ-ரை.) அறன் எனப்பட்டது இல்வாழ்க்கையே - இருவகை யறத்துள் ளும் அறம் என்று தமிழ் நூல்களாற் சிறப்பித்துச் சொல்லப் பெற்றது இல்லறமே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - அவ் வில்லறமும் பிறராற் பழிக்கப்படாத தூய்மையுடைத்தாயின் மிக நன்றாம்.

பிரிநிலை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. அஃது என்னுஞ் சுட்டுப் பெயர், முற்குறிக்கப்பெற்ற இல்லறத்தைச் சுட்டுமேயன்றி, அதற்கு மறுதலை யானதும் ஓரிடத்துங் குறிக்கப் பெறாததுமான துறவறத்தைச் சுட்டாது. மேலும், துறவறமும் நல்லதே யென்று கூறின், அது 'அறனெனப்பட்டது இல்வாழ்க்கையே' என்னும் பிரிநிலைத் தேற்றக் கூற்றின் வலிமையைக் கெடுத்து முன்னுக்குப் பின் முரணாதல் காண்க. "இல்லற மல்லது நல்லற மன்று" என்னும் ஒளவையார் கூற்றையும் நோக்குக.

பிறன்பழிக்கும் இல்வாழ்க்கை விருந்தோம்பாமையாலும் பிறனில் விழைவாலும் வரைவின் மகளிர் தொடர்பாலும் பிறவற்றாலும் நேர்வதாம்.

50.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்.

(இ-ரை.) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் இவ் வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் இவ்வுலகத்தானே யாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

இல்லறவாழ்க்கையில் தூய்மையாக வாழ்பவன் மக்களுட் சிறந்தவ னாக இருப்பனாதலாலும். இம்மையிற் செய்த நல்வினைப் பயனை மறுமை யில் தேவனாகித் தேவருலகத்தில் நுகர்வான் என்னும் நம்பிக்கையினாலும், வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். தெய்வம் என்றது வகுப்பொருமை