உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 10.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இக்காலம்

7


ஒருவகைப் பெற்றிய (சித்த) முறையில் நெடுங்கணக்கை ஆய்ந்து தமிழின் மூல முதன்மையைக் கண்டவர். இவர் எழுதியவை அஞ்ஞானம், தமிழ்மறை விளக்கம், தமிழ் அலகைத் தொடர், கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் முதலியன.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் (1884-1940)

இவர் மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத் தேர்வில் முதன் முதலாகவும் முதல்தரமாகவும் தேறிப் பொற்கடகம் பெற்ற பெரும் புலவர்.

இவர் எழுதியவை: வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி, நக்கீரர் (வரலாறு), கபிலர் (வரலாறு), கள்ளர் சரித்திரம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது முதலிய 9 சிறு பனுவல்கட்கு உரை, கண்ணகியின் வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணவுரை, அகத்தியர் தேவரத் திரட்டு உரைத்திருத்தம், தண்டியலங்காரப் பழையவுரைத் திருத்தம், யாப்பருங்கலக் காரிகையுரைத் திருத்தம், சிலப்பதி காரவுரை, மணிமேகலையுரை, இரு கட்டுரைத் திரட்டுகள், (கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையுடன் இணைந்து) அகநானூற்றுரை என்பன. இவற்றுள் இறுதியது மாபெரும் புலவரே செய்தற்குரிய ஏற்றமான தமிழ்த் தொண்டாம்.

பம்மல் சம்பந்த முதலியார்

இவர் சென்னைச் சிறுவழக்கு மன்ற நடுத்தீர்ப்பரா யிருந்தவர். இவர் எழுதியவை யயாதி, வேதாளவுலகம் முதலிய நாடகங்களும், நாடகத் தமிழ் என்னும் நாடக நூலும், யான்கண்ட புலவர்கள் என்னும் வரலாறும் ஆகும்.

கார்மேகக் கோனார்

இவர் தமிழின் பெருமையைப் பேணிய புலவருள் ஒருவர். இவர் எழுதியது நல்லிசைப்புலவர் வரலாறு.

மறைமலையடிகள் (1876-1950)

பொதுத் தமிழிலக்கிய மனைத்தும் பொருந்தக் கற்று, ஆங்கிலரும் வியக்கும் அழகிய நடை கைவரப்பெற்று, ஆரிய மறைகளையும் ஆழ்ந்து ஆராய்தலுற்று, கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைந்து கிடந்த தனித்தமிழை மீட்டு, எப்பொருள் பற்றியும் செந்தமிழில் எழுத வொண்ணும் என்னும் உண்மையை நாட்டிய மறைமலையடிகள், திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாக வைத்தெண்ணத்தக்க தனிப்பெருந் தகுதியுடையவராவர்.