உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

95


உல் - உற்கு - உற்கம் = 1. அனற்றிரள், 2. கடைக்கொள்ளி,

3. விண்வீழ்கொள்ளி.

உற்குதல் = எரிகொள்ளி வீழ்தல்.

திசையிரு நான்கும் உற்கம் உற்கவும்'


(புறம்.41:4)

வடமொழியில் உஷ் என்பதையே மூலமாகக் காட்டுவர்.

ஊசி -சூசி (இ.வே.) -suici

உள் - அள் = கூர்மை. உள் - உளி = கூரிய வெட்டுங் கருவி. உளி - உகிர் = கூரிய விரலுறுப்பு.

உளி - உசி - ஊசி = கூர்மை (பதிற். 70 : 7), கூரிய குத்துக் கருவி அல்லது தையற்கருவி (பிங்.), சிறுமை.

ஒ.நோ : இளி - இசி, வாளி - வாசி - வாசிகை.

ஊசிக் கணவாய், ஊசிக்கழுத்தி, ஊசிக்களா, ஊசிக்காய், ஊசிக் கார், ஊசிச்சம்பா, ஊசித் தகரை, ஊசித்தூறல், ஊசித் தொண்டை, ஊசிப்பாலை, ஊசிப்புழு, ஊசிமல்லிகை, ஊசி மிளகாய், ஊசிமுல்லை, ஊசிவேர் என்பன கூர்மை அல்லது சிறுமைபற்றித் தொன்றுதொட்டுப் பல்வேறு பொருள்கட்கு வழங்கிவருஞ் சொற்களாம்.

எழுத்தூசி, குத்தூசி, துன்னூசி, தையலூசி என்பனவும் அத்தகையனவே. எழுத்தூசி = எழுத்தாணி, “மையெழுத் தூசியின்.... எழுத்திட்டாள்" (சீவக. 1767).

"மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்”

(பதிற். 42:2-4)

என்பதால், புண்தைக்கும் ஊசியும் பண்டைத் தமிழகத் திருந்தமை அறியப்படும்.

“கொல்லத் தெருவில் ஊசி விற்பதா?" என்பது பழமொழி.

மதிற்றலையைக் கைப்பற்றும் பகைவர் கையைப் பொதுக்கும் ஊசிப் பொறிகளும், அக்காலத்துக் கோட்டை மதில்மேல் வைக்கப் பட்டிருந்தன.

"ஐயவித் துலாமுங் கைபெய ரூசியும்"

(சிலப். 15:213)

வடமொழியில் சூசி என்னும் சொற்கு மூலமில்லை. தையலைக் குறிக்கும் சிவ் என்னும் சொல்லை மூலமாகக் காட்ட விரும்புவர்.