உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

(2) ஊகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி

31

ஊகாரச்சுட்டு, முற்கூறியபடி முதலாவது முன்மையைக் குறிக்கும். முன்மையென்பது, காலமுன், இடமுன், முன்னிலை, முன்னுறுப்பு, முற்பகுதி, முனி (நுனி) முதலிய பல கருத்துகளைத் தழுவும்.

முன்மைக் கருத்தினின்று முன் வருதலாகிய தோன்றற் கருத்துப் பிறக்கும். வித்தினின்று முளையும் மரத்தினின்று துளிரும் தாயினின்று சேயும் போல, எப்பொருளும் ஒன்றினின்றே தோன்றுதலானும்; குட்டி யுங் குழவியும் முகமும் முன்னுங் காட்டியல்லது புறமும் பின்னுங் காட்டித் தோன்றாமையானும்; எப்பொருட்கும் முற்பகுதி முகம் எனப் படுதலானும் முகத்திற்கு எதிர்ப்பட்ட பக்கம் முன்மையாதலானும்; புதிதா- ஒன்றினின்று ஒன்று தோன்றுதலெல்லாம் முன்வருதலேயாதல் அறிக.

தோன்றற் கருத்தினின்று முற்படற் கருத்துப் பிறக்கும். ஒரு மரத்தில் தோன்றிய தளிர் முன்னால் நீண்டு வளர்வதும், ஓர் உடம்பில் தோன்றிய உறுப்பும் கொப்புளமும் முன்னுக்குத் தள்ளியும் புடைத் தும் வருவதும், இவை போல்வன பிறவும், முற்படலாகும்.

முற்படற் கருத்தினின்று முற்செலவுக் கருத்துப் பிறக்கும். இடம் பெயரும் இருதிணை யுயிரிகளும் ஓரிடத்தினின்று இன்னோரிடத் திற்குச் செல்வதெல்லாம் முற்செலவே. பிற்செலவெல்லாம், பெரும் பாலும், உயிரிகள் சிறிது வளர்ச்சியுற்றபின்பும் குறுந்தொலைவிற்கும் வேண்டுமென்றே நிகழ்த்தப் பெறுவதால், இயற்கையான செலவெல் லாம் பொதுவாக முற்செலவென்றே யறிக. கீழிருந்து மேற்செல்வதும் ஒருவகை முற்செலவாதலின், முற்செலவு என்பது எழுதல் அல்லது உயர்தலையுந் தழுவும்.

முற்செலவுக் கருத்தினின்று நெருங்கற் கருத்துப் பிறக்கும். ஒரு மரக்கிளை நீண்டு வளர்ந்து இன்னொரு கிளையை அடுப்பதும், இரு திணை யியங்குயிரிகளும் முன்சென்று தாந்தாம் விரும்பும் இடத்தை யும் பொருளையுங் கிட்டுவதும், நெருங்கலாகும்.

நெருங்கற் கருத்தினின்று தொடுதற் கருத்துப் பிறக்கும். ஒரு பொருள் எத்திசையிலாயினும் மேன்மேலும் சென்றுகொண்டே யிருப்பின், ஏதேனுமொரு பொருளைத் தொட்டே தீரல் வேண்டும். முன்னோக்கிச் செல்லும் உயிரிகளும் தாம் விரும்பிய பொருளையும்