உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

113

யா என்னும் வினாவடி, அஃறிணைப் பன்மை வினாப் பெயராகச் செய்யுளில் வழங்கும்.

காலப் பெயர்

காலம் என்னும் பெயர் செந்தமிழ்ச்சொல்லே யென்பது, யான் செந்தமிழ்ச் செல்வியில் வரைந்துள்ள ‘காலம் என்னும் சொல் எம்மொழிக்குரியது' என்னுங் கட்டுரையிற் கண்டுகொள்க.

பொழுது : பொழுது சூரியன், வேளை (சிறுபொழுது), பருவகாலம் (பெரும்பொழுது.) பொள் - (போள்) - போழ். போழ்து (பொழுது) - போது. ஒ.நோ: வீழ்து - விழுது.

போழ்தல் = பிளத்தல், வெட்டுதல், நீக்குதல்.

சூரியன் இருளைப் போழ்வது.

“வாள்போழ் விசும்பில்”

என்றார் நக்கீரர்.

(திருமுருகு.8)

பொழுது என்னும் சொல் முதலாவது சூரியனைக் குறித்து, பின்பு அதன் தோற்ற மறைவுகளால் நிகழும் காலத்தைக் குறித்தது. பொழுது புறப்பட்டது, பொழுது சாய்ந்தது என்னும் வழக்குகளில், இன்றும் அச் சொல் சூரியனைக் குறித்தல் காண்க.

சமையம் : சமை + அம் = சமையம். சமைதல் பக்குவமாதல். ஒரு பொருள் பக்குவமான வேளை சமையம் எனப்பட்டது. இன்று அச் சொல் தகுந்த வேளைக்குப் பெயராய் வழங்குகின்றது.

பருவம்: ஒரு பொருள் நுகர்ச்சிக்கேற்ற அளவு பருத்திருக்கும் நிலை பருவம். பரு + வு = பருவு. பருவு + அம் = பருவம்.

நேரம் : நேர் + அம் = நேரம். நேர்தல் நிகழ்தல். ஒரு வினை நேரும் காலம் நேரம்.

வேளை : வேல் - வேலி - வேலை - வேளை.

கருவேல முள்ளால் அடைப்பது வேலி. வேலி ஓர் இடத்தின் எல்லை. வேலை = ஒரு கால வெல்லை. வேலை யென்பதின் திரிபு வேளையென்பது. வேலை செய்யுள் வழக்கு.

மாதம் : மதி + அம் = மாதம்.

மாதம் என்னுங் கால அளவு மதியினா லுண்டானது.