உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




116

திசைப்பெயர்

ஒப்பியன் மொழிநூல்

திகை - திசை. திகைத்தல் மயங்கல். திகைப்பதற்கிடமானது திகை. திசைத்தல் திகைத்தல். திக்குவதற்கிடமானது திக்கு. திக்குதல் தடுமாறல். திக்குமுக்காடுதல் என்னும் வழக்கை நோக்குக. வடநூலார் திஸ் (காட்டு) என்னும் மூலத்தைக் காட்டியது பிற்காலம்.

திசைச்சொல் என்பது ஓர் இலக்கணக் குறியீடாயிருத்தலை நோக்குக. திசை திக்கு என்னும் இருசொல்லும் வடசொல்லாயின், தமிழுக்குத் திசைபற்றிய சொல்லே யில்லையென்றாகும். இது கூடாமையே. எல்லையென்னுஞ்சொல் முதலாவது சூரியனைக் குறித்து, பின்பு முறையே வேளை, குறித்த வேளை, குறித்த இடம், வரம்பு என்னும் பொருள்களைத் தழுவியது. ஆகையால் இச் சொல் திசைப்பெயருக் கேற்காமை யறிக.

வடக்கு : வடம் + கு = வடக்கு

வடம் = பெருங்கயிறு. வடம் போன்ற விழுதுகளை விடுவது வட (ஆல) மரம். வடமரம் வங்காளத்தில் மிகுதியாய் வளர்கின்றது. அதனாலேயே அது Ficus bengalensis என்று நிலைத்திணை நூலில் அழைக்கப்படுகிறது. நாவலந் (இந்து) தேயத்தின் வடபாகத்தில் வடமரம் மிகுதியாய் வளர்தலின், அத் திசை வடம் எனப்பட்டது.

தெற்கு: தென் + கு = தெற்கு.

நாவலந்தேயத்தின் தென்பாகத்தில் தென்னைமரம் இன்றும் சிறப்பாய் வளர்கின்றது. தென்னாட்டையும் கருநீசியத் தீவுகளை யும் நோக்குக.

தென்னைமரம் மிகுதியாய் வளரும் திசை தென்திசை

யெனப்பட்டது.

கிழக்கு மேற்கு என்பவை, மொழிநூற் பெரும்புலவர் கால்டுவெல் ஐயர் நுணித்தாய்ந்து கண்டபடி, முறையே கீழ் மேல் என்னும் சொற்களடியாய்ப் பிறந்தவை.

வடம் தென் கீழ் மேல் என்று முதலில் வழங்கிய பெயர்கள், இன்று நான்காம் வேற்றுமை வடிவில் வழங்குகின்றன. இனி, அக்கு என்பது ஒரு பின்னொட்டு எனினும் ஒக்கும்.