பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

(எங்குந்) தங்குதல். இறுப்பது இறை. இத் தொழிற்பெயர் ஆகுபெயராய்த் தன் நாடுமுழுதும் அதிகாரத்தால் தங்கியிருக்கின்ற அரசனைக் குறிக்கும். இறைவன் என்பது ஆண்பாலீறு பெற்ற பெயர். இவ் விருவடிவும் எங்கும் நிறைந்திருக்கின்ற கடவுளையுங் குறிக்கும். இப் பெயர்ப் பொதுமையால், அரசன் முதற்காலத்தில் கண்கண்ட தெய்வமாகக் கருதப்பெற்றமை அறியப்படும்.

381. படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு.

(இ-ரை.) படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் – படையுங் குடியும் பொருளும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறுறுப்புகளையு முடையவன்; அரசருள் ஏறு - அரசருள் ஆணரிமா போல்வான்.

நாடில்லாமற் குடியிருக்க முடியாதாகலின், இங்குக் குடியென்றது நாட்டையுஞ் சேர்த்தென அறிக. ஆகவே, இங்குக் கூறப்பட்ட வுறுப்புகள் உண்மையில் ஏழாம். அதனால் நாடு என்பது ஒரு தனியுறுப்பாக 74ஆம் அதிகாரத்திற் கூறப்பட்டிருத்தலுங் காண்க. (நாடு) குடி, பொருள், படை, அரண், அமைச்சு, நட்பு என்பதே இயற்கை முறையாயினும், செய்யு ளமைப்பு நோக்கி மாற்றிக் கூறப்பட்டன. 'ஆறும்' என்னும் முற்றும்மை யால், அவற்றுள் ஒன்று குறையினும் அக்காலத் தரசியல் நீடித்துச் செல்லாதென்பதாம். கூழ் என்பது உணவு. அது இங்கு அதற்கு மூலமான பொருளை யுணர்த்திற்று. ஏறு போல்வானை ஏறென்றது உவமையாகு பெயர். சில விலங்கின் ஆண்பாற் பொதுப்பெயரான ஏறென்பது சிறப்புப்பற்றி அரிமாவின் ஏற்றைக் குறித்தது. ஏழுறுப்பு முள்ளவனைப் பகையரசன் பெரும்பாலும் வெல்லமுடியா தென்பது கருத்து.

382. அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கு மெஞ்சாமை வேந்தற் கியல்பு.

(இ-ரை.) வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பான தன்மையாவது; அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந் நான்கும் எஞ்சாமை - அஞ்சாமையும் கொடைத்தன்மையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந் நான்கு குணமும் குறையாதிருத்தலாம்.