பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

இவற்றுள் அறிவு ஏழுறுப்புகளையும், ஈகை படையையும் குடியையும் நோக்கியனவாம். ஏனை யிரண்டும் வினைக்குரியனவாம். ஊக்கம் என்பது வினைசெய்தற்கண் உண்டாகும் மனவெழுச்சி. இவற்றுள் ஒன்று குறையினும் பகையினாலேனும் படையினாலேனும் குடியினாலேனும் கேடு நேருமாகலின், 'எஞ்சாமை வேந்தற் கியல்பு' என்றார். வள்ளுவர் காலத் தமிழகம் மூவேந்தராட்சிக் குட்பட்டதாகலின் அரசன் வேந்தன் எனப்பட்டான். முடியணியும் உரிமையுடைய சேர சோழ பாண்டியர் மூவரே வேந்தர். வேய்தல் முடியணிதல். வேய்ந்தான் - வேந்தன். உம்மை முற்றும்மை.

383. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு.

(இ-ரை.) நிலன் ஆள்பவற்கு - நாட்டை யாளும் அரசனுக்கு; தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும் நீங்கா - அரசக் கருமங்களை விரைந்து செய்யுந் தன்மையும் அவற்றை யறிதற்கேற்ற கல்வியறிவும் அவற்றைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் என்றும் நீங்காதிருத்தல் வேண்டும்.

கல்வியறிவினால் வினை வெற்றியாக முடியும்வகை தீர்மானிக்கும் திறமும், துணிவினால் தீர்மானித்ததை நெஞ்சுரத்துடன் நிறைவேற்றுவதும், தூங்காமையால் உரியகாலத்தில் தொடங்கி முடிப்பதும், கூடும் என்பதாம். இவற்றுட் கல்வி ஏழுறுப்புகளையும் நோக்கியது. ஏனை யிரண்டும் வினைக்குரியன. உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.

384. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு.

(இ-ரை.) அறன் இழுக்காது – ஆட்சித் தலைவனுக்குரிய அறவொழுக்கத்தினின்று தவறாது; அல்லவை நீக்கி - அறமல்லாதவை தன்னாட்டிற் பிறராலும் பிறவுயிர்களாலும் நிகழ்வதையும் நீக்கி; மறன் இழுக்கா மானம் உடையது அரசு – போர்மறத்திலும் மாசில்லாத பெருமையுடையவனே தகுந்த அரசனாவான்.

“அறநெறி முதற்றே யரசின் கொற்றம் அதனால் தமரெனக் கோல்கோ டாது