பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

5



(இ-ரை.) இயற்றலும் - அரசியற்குப் பொருள் வருவாய்களை மேன்மேலமைத்தலும்; ஈட்டலும் - அவ் வருவாய்களின் வழிவந்த பொருள்களை ஓரிடத்துத் தொகுத்தலும்; காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கவராமற் காத்தலும்; காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம்பொரு ளின்ப வழிகளிற் செலவிடக் கூறிடுதலும்; வல்லது அரசு - வல்லவனே நல்லரசன்.

பொருள்களாவன: பொன் மணி முதலிய இயற்கை விளைபொருள்களும், நெல் பயறு முதலிய செயற்கை விளைபொருள்களும், அணிகலம் மது முதலிய செய்பொருள்களுமாம். அவை வரும் வழிகளாவன: குடிகள் செலுத்தும் வரியும், சிற்றரசர் இடும் திறையும், பகையரசரை வென்று பெறும் தண்டமும், புதையலும், நட்பரசர் நன்கொடையும் பிறவுமாம். பொருள்களைக் கவரக்கூடிய பிறர் கள்வர், கொள்ளைக்காரர், பகைவர், உறவினர், பணியாளர் முதலியோர். கோயில்கள். துறவோர் பள்ளிகள், ஊட்டுப்புரைகள் முதலியவற்றிற்கும் புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்குங் கொடுத்தலை அறங்கல்விப் பொருட்டாகவும்; நாற்படை, செண்டுவெளி, அரண், நீரணை, பாசன நீர்நிலை, பகைவர் நட்புப் பிரிப்பு, தன்னட்புச் சேர்ப்பு, படையெடுப்பு, போர், அரசியல் திணைக்களங்கள் முதலியவற்றிற்குச் செலவிடுதலைப் பொருட் பொருட்டாகவும்; நீராழி மண்டபம், தெப்பக்குளம், செய்குன்று, இளமரக்கா, உரிமைச்சுற்றம், சாக்கைக் கூத்து முதலியவற்றிற்குச் செலவிடுவதை இன்பப் பொருட்டாகவுங் கொள்க. இயற்றல் முதலிய நால் வினைக்கும் மிகுந்த சூழ்வினையும் ஆள்வினையும் வேண்டியிருத்தலின், 'வல்லது' என்றார். அரசு என்பதற்கு மேல் உரைத்தவா றுரைக்க.

386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன் மீக்கூறு மன்ன னிலம்.

(இ-ரை.) காட்சிக்கு எளியன் முறைவேண்டினவர்க்கும் குறை வேண்டினவர்க்கும் காண்பதற் கெளியவனாய்; கடுஞ்சொல்லன் அல்லனேல் - பகைவரல்லாத யாரிடத்தும் இன்சொற் சொல்பவனா யிருப்பின்; மன்னன் நிலம் மீக் கூறும் - அவ் வரசனது நாட்டை ஏனை நாடுகளினுஞ் சிறந்ததாக உலகம் உயர்த்துக் கூறும்.

முறைவேண்டினவர் வலியவரால் தாக்குண்டும் இழப்புண்டும் துன்புற்றவர். குறைவேண்டினவர் வறுமையால் வருந்தியவர். காட்சிக் கெளிமையாவது அலுவல் நேரத்தில் ஓலக்க மண்டபத்திலும் நெருக்கடி நிலைமையில் அரண்மனையிலும் காணக்கூடியவனா யிருத்தல். கடுஞ்