பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

திருக்குறள்

தமிழ் மரபுரை



சொல்லாவது சினத்தாலும் பொருளாலும் விளைவாலும் தீதாகிய சொல். நாட்டையுயர்த்திக் கூறுதல் அரசனை யுயர்த்தலையுந் தழுவும். உலகம் என்னும் எழுவாய் தொக்கு நின்றது.

உலகம் செங்கோலரசனது நாட்டை மீக்கூறுவது.

"கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும் உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே" (சிலப். 13:5-10)

என்று கோவலன் கூற்றாக இளங்கோவடிகள் பாண்டியன் நாட்டைச் சிறப்பித்துக் கூறியது போன்றது.

387. இன்சொலா லீத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற் றான்கண் டனைத்திவ் வுலகு.

(இ-ரை.) இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடன் வேண்டியவற்றைக் கொடுத்து அன்பாகக் காக்கவல்ல அரசனுக்கு; இவ்வுலகு தன் சொலால் தான் கண்ட அனைத்து - இவ் வுலகம் தன் புகழோடு கூடித் தான் கருதியவாறு அமைவதாம்.

‘இன்சொல்’ குரலாலும் பொருளாலும் விளைவாலும் இனிய சொல். ஈதல் புலவர், பாணர், கூத்தர் முதலியவர்க்குப் பரிசும் முற்றூட்டும் அளித்தலும், கோயில்கள், துறவோர் பள்ளிகள், ஊட்டுப்புரைகள் முதலியவற்றிற்கு இறையிலியாக அறப்புறம் விடுதலும். அளித்தல் மேற்கூறிய ஐவகையாலும் தீங்கு நேராமற் காத்தல். இம் மூன்றும் ஒருங்கே யமைதல் அரிதாதலின் ‘வல்லாற்கு’ என்றார். இவ் வுலகம் தான் கருதியவாறு அமைதலாவது தனக்கு வயப்பட்டுத் தான் விரும்பியவாறு பயன்படுதல்.

388. முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்.

(இ-ரை.) முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் - நடுநிலையாகத் தீர்ப்புச்செய்து எவ்வகையிலும் துன்பம் நேராது குடிகளைக் காக்கும்