பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

7


அரசன்; மக்கட்கு இறை என்று வைக்கப்படும் - பிறப்பால் மாந்தனாயினும் அவனால் ஆளப்பெறும் மக்களாற் கடவுளென்றே கருதப்படுவான்.

முறைசெய்தலாவது, பொற்கைப் பாண்டியன் போலத் தன்னையும் மன் (மனு) முறைகண்ட சோழன் போலத் தன் மகனையும் தண்டித்தல். காப்பாற்றுதல் தெய்வத்தால் வருந் துன்பத்தையும் வழிபாடு, நோன்பு, திருவிழா முதலியவற்றால் தடுத்துக் காத்தல், இறைவன் என்னும் இருவடிவிலுமுள்ள கடவுட்பெயர் அரசனையுங் குறிப்பதும், கோயில் என்னும் சொல் கடவுள் வழிபாட்டு மனைக்கும் அரசனது அரண்மனைக்கும் பொதுப் பெயராயிருப் பதும், இக் குறட் கருத்தை மெய்ப்பிக்கும். திருவாய்க்கேள்வி, திருமந்திர வோலை முதலிய அரசிய லதிகாரிகளின் பதவிப் பெயர்கள், திரு என்னும் அடை பெற்றிருப்பதும் இக் கருத்துப்பற்றியே.

389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

(இ-ரை.) செவிகைப்பச் சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - அரசன் தீய வழியிற் செல்லும்போது அஞ்சாது இடித்துரைக்கும் நல்லமைச்சர், செவிக்கு இன்னாதனவாகச் சொல்லும் சொற்கள் பொறுக்கத் தகாதனவாயினும், அவற்றின் இனிய விளைவு நோக்கிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய அரசனது; கவிகைக்கீழ் உலகு தங்கும் - குடை நிழலில் உலகந் தங்கும்.

'செவிகைப்ப' என்பதற்கேற்ப இடித்துரைக்கும் நல்லமைச்சர் என்பது வருவித்துரைக்கப்பட்டது. கைத்தல் கசத்தல். இனித்தல் இனிமையைக் குறித்தலாற் கசத்தல் இன்னாமையைக் குறித்தது. நாவின் புலம் செவியின் மேல் ஏற்றிக் கூறப்பட்டது இனம்பற்றி. 'கவிகை', 'உலகு' இரண்டும் ஆகுபெயர். தங்குதல் இனிதாய் வாழ்ந்திருத்தல். சிறந்த அறிவுரைகளைக் கைக்கொள்வதால் உலக முழுவதும் ஆள்வான் என்பதாம்.

390. கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு முடையானாம் வேந்தர்க் கொளி.

(இ-ரை.) கொடை - தகுதியுடையவர்க்கு வேண்டுவன கொடுத்தலும்; அளி- யாவரிடத்தும் அன்பாயிருத்தலும், செங்கோல் - நேர்மையான ஆட்சியும்; குடி ஓம்பல் - தளர்ந்த குடிகளைப் பேணுதலும்; நான்கும் உடையான் - ஆகிய