பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

திருக்குறள்

தமிழ் மரபுரை



“ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம் தாரணம் மறமே சந்தம் தம்பம்நீர் நிலம்உ லோகம் மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள”

என்றிரங்குவது ஒரு பழந்தனியன். ஆயின், எண்ணூல், கணக்கியல் முதலிய கணக்கு நூல்களும் ஏரம்பம் முதலிய கணிதநூல்களும் ஆரியரால் அழிக்கப்பட்டுவிட்டன என்பதே. ஆராய்ச்சியாளர் கருத்தாம்.

'என்ப' என்னும் மூன்றனுள், முன்னைய விரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர்; பின்னது உயர்திணைப் பன்மைவினை. 'வாழ்தல்' என்பதை "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்பதிற் போலக் கொள்க. “எண்ணும் மெழுத்துங் கண்ணெனத் தகும்" (கொன்றை. 7) என்பது இக் குறட் சுருக்கமே.

393. கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.

(இ-ரை.) கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையவரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் கற்றோரே; கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றக் கல்லாதவரோ வெனின் தம் முகத்தில் இரண்டு கண்களையல்ல, புண்களையே உடையர்.

நெட்டிடைப் பொருள்களையும் முக்காலச் செய்திகளையும் நூல் வாயிலாக அறியும் அறிவுக்கண்ணுடையவரைக் 'கண்ணுடையர்' என்றும், அஃதின்றி மாசுபடிந்து உறுத்துவதும் நோயுற்றுத் துன்பஞ்செய்வதுமான ஊன்கண்ணை மட்டு முடையவரைப் 'புண்ணுடையர்' என்றுங் கூறினார். கற்றார் கண்போன்றே கல்லார் கண்ணும் ஏட்டைக் கண்டும் அதிலுள்ள எழுத்தைப் படிக்கத் தெரியாமையால், அது விழிகண் குருடு போல்வது மட்டுமன்றி நோவுந்தருவதென்று நன்மையின்மையும் தீமையுண்மையும் ஒருங்கு கூறி,கற்றாருயர்வும் கல்லாரிழிவும் விளக்கிக் காட்டினார்.

394. உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித லனைத்தே புலவர் தொழில்.

(இ-ரை.) உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாரொடும். அவர் மகிழுமாறு சென்று கூடி, இனி இவரை என்று காண்பேமென்று அவர் ஏங்குமாறு நீங்குதலாகிய அத்தன்மையதே; புலவர் தொழில் - சிறந்த கல்வியுடையார் செயலாம்.