பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

11



கற்றாரின் அடக்கமும் அறவொழுக்கமும் இன்சொல்லும் உறுதி பயக்கும் அறிவுரையும் எல்லாரையும் இன்புறுத்துதலால், அவரை விட்டுப்பிரிய ஒருவரும் விரும்பார் என்பதாம். ஏகாரம் தேற்றம்.

395. உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்.

(இ-ரை.) உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் - செல்வர் முன் வறியர்போல் தாமும் ஆசிரியன்முன் ஆசையால் தாழ்ந்துநின்று கல்விகற்றவரே தலையானவராவர்; கல்லாதவர் கடையரே - அங்ஙனந் தாழ்ந்து நிற்றற்கு நாணிக் கல்லாது விட்டவர் என்றுங் கடைப்பட்டவரே.

"உடையார் முன் இல்லார் ஏக்கற்று" என்பது, பொருளுங் கல்வியும் இருவகைச் செல்வம் என்பதை யுணர்த்தும் அதனால் ஆசிரியனுக்குப் பணிவிடையும் பொருளுதவியும் செய்வது மாணவன் கடமையென்பதும் பெறப்படும்.

"உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" (புறம்.183)

என்பது பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு. 'கடையர்' என்பதன் மறுதலையான தலையானவர் என்னுஞ் சொல் தொக்குநின்றது. மாணவநிலைக்கு ஏற்காத மானம்பற்றிக் கல்வியை யிழந்த கண்ணிலியர், காலமெல்லாங் கண்ணியமும் இன்பமுமின்றிப் பிறந்த நாட்டிலேயே பேரிடர்ப்படுவராதலால், 'கடையரே'யென்று தேற்றேகாரங் கொடுத்துக் கூறினார். இனி, இக் குறளின் முதலடிக்கு.

"உடையார் - இப்பொழுது கல்வியுடையவராயிருப்பவர்; முன் - தாம் கல்வியுடையராதற்குமுன்; இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் - வறுமைப்பட்டவர் எவ்வாறு பல துன்பங்களுக் குள்ளாவார்களோ அவ்வாறு வருத்தப்பட்டுக் கற்றவரே யாவர்" என்று கூறும் உரையும் ஒன்று உளது. (ந.சி.கந்தையா பிள்ளை).

396. தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு.

(இ-ரை.) மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் – மணலில் தோண்டிய நீர்க்கிடங்கில் தோண்டிய அளவிற்கு நீரூறும்; மாந்தர்க்குக் கற்ற அனைத்து அறிவு ஊறும் - அதுபோல் மக்கட்குக் கல்விகற்ற அளவிற்கு அறிவூறும்.