பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

திருக்குறள்

தமிழ் மரபுரை



மணற்கிடங்கு சிறிதே தோண்டினால் ஊறும் நீர் போதாது. சற்று ஆழமாகத் தோண்டினாற் போதிய நீர் ஊறும். அதன்மேலும் தோண்டத் தோண்ட ஊறுமாதலால், அவரவர் தேவைக்குத் தக்கவாறு தோண்டிக் கொள்ளல் வேண்டும். அதுபோல், கல்வியும் சிறிது கற்ற அளவில் அறிவு நிரம்பாது; பேரளவு கற்றால் வேண்டிய அறிவு அமையும். அதன்மேலுங் கற்பது அவரவர் தேவையையும் விருப்பத்தையும் ஆற்றலையும் ஓய்வையும் வாழ் நாளளவையும் பொறுத்ததாம். இக் குறளில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை அணி.

"நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன் னுண்மை யறிவே மிகும்”

என்னுங் குறளிற் கூறியது அறிவு பயன்படும் வகைபற்றிய தென்றும், இங்குக் கூறியது அறிவு வளரும் வகைபற்றிய தென்றும் வேறுபாடறிக.

397. யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. (379)

(இ-ரை.) யாதானும் நாடாம் ஊராம் - நிரம்பக் கற்றவனுக்கு எந்நாடுந் தன்னாடாம். எவ்வூருந் தன்னூராம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - அங்ஙன மிருக்கவும், ஒருவன் தான் இறக்குமளவும் கல்லாது காலங்கழிப்பது எதன் பொருட்டு?

நிரம்பக் கற்றவர்க்கே வேற்றுநாடும் வேற்றூரும் தன்னாடும் தன்னூருமாகு மென்பது,

‘ஆற்றவுங் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில்" (4)

என்னும் பழமொழிச் செய்யுளாலும்,

"மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத் தன்றேய மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு” (26)

என்னும் மூதுரைச் செய்யுளாலும் அறியப்படும்.