பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி

13



‘யாதானு 'நாடாமால்' என்றது, சிறந்த தமிழ்ப் பாவலன் வேற்று நாடு சென்று சிறப்புப் பெறுவதைக் குறித்ததேயன்றித் தமிழர் அல்லது தமிழ்ப்புலவர் வேற்று நாட்டு மொழிகளைக் கற்கவேண்டுமென்னுங் குறிப்பினதன்று. அவ் வேற்று நாடுகளும் இந்தியாவிற் குட்பட்டனவும், இலங்கையும் மலையாவும் போல் தமிழர் குடியேற்றங் கொண்டனவுமாக இருந்திருக்குமேயன்றி எல்லா வெளிநாடுகளுமாக இருந்திருக்க முடியாது. பாவேந்தராகிய கம்பர் கி.பி. 12ஆம்.நூற்றாண்டில் ஓரங்கல் (Warangal) என்னும் தெலுங்க நாடு சென்று, அதன் அரசனாகிய பிரதாபருத்திரனாற் போற்றப்பட்டார். திருவள்ளுவர் காலமாகிய கி.மு. 2 ஆம் நூற்றாண்டில், வடமொழியும் தென்மொழியென்ற தமிழுமாகிய இருமொழிகளிலேயே பல்துறைப் புலமையிலக்கிய மிருந்ததனாலும், இறந்துபட்ட பண்டைத் தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி அக்காலத் திருந்ததாகத் தெரிவதனாலும், மராடமுங் குச்சரமும் பஞ்ச திரவிடங்களுள் இரண்டாகப் பண்டைக் காலத்திற் கொள்ளப் பட்டதினாலும், வங்கநாட்டுக் காளிக்கோட்டத்தில் தமிழ வணிகர் குடியேறி யிருந்ததினாலும், தமிழ்ப் பெரும்புலவர் வடஇந்தியாவரை சென்று வாழ்ந்திருக்கவோ சிறப்பிக்கப்பட்டிருக்கவோ முடியும். அல்லாக்கால்,

"நந்தன் வெறுக்கை யெய்தினும்” (அகம். 251)

“பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ” (அகம். 265)

"பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே” (புறம். 2)

என்று தமிழ்ப் புலவர் வடநாட்டுச் செய்திகளைப்பற்றிப் பாடியிருக்க முடியாது.

"யாதும் ஊரே யாவருங் கேளிர்" (புறம்.292)

என்பதும், "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" (திருமந்திரம், 2104), "குலமும் ஒன்றே குடியும் ஒன்றே" (கபிலர் அகவல்) என்பன போலத் தமிழனின் உயர்ந்த உலக வுடன்பிறப்புக் (Universal Brotherhood) கொள்கையைக் குறிக்குமேயன்றி, தமிழன், பிறநாட்டு மொழிகளைக் கற்கவேண்டு மென்னுங் கருத்தினதன்று.